செயலிகளுக்கான வயது வரம்பு & தனியுரிமை
செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் உங்கள் உண்மையான பிறந்ததேதிக்குப் பதிலாக உங்களின் வயது வரம்பைப் பகிர்ந்து, வயதுக்கு ஏற்ற அனுபவத்தை வழங்க செயலிகளுக்கு உதவுகிறது.
- டெவலப்பர்களுடன் பகிர நீங்கள் தேர்வுசெய்யும் வயது வரம்பைத் தீர்மானிக்க உங்கள் பிறந்ததேதி மற்றும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாடு அல்லது வட்டாரம் பயன்படுத்தப்படும்.
- செயலிகளுடன் பகிரப்படும் வயது வரம்புகள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும்.
- நீங்கள் குடும்பக் குழுவில் இருக்கும் சிறார் அல்லது பதின்ம வயதினர் என்றால், உங்களின் சார்பாக உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தைச் செயல்படுத்தி, உள்ளமைவை நிர்வகிக்க வேண்டும்.
- செயலியுடன் நீங்கள் பகிரும் வயது வரம்பு, உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாடு அல்லது வட்டாரத்தில் பருவ வயதிற்கான வரம்பிற்குக் கீழே நீங்கள் இருப்பதைக் குறித்தால், குறிப்பிட்ட பெற்றோர் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்ற தகவலும் பகிரப்படும்.
செயலிகளுக்கான வயது வரம்பை அமைத்தல்
செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தை வழங்குவதற்காக, உங்கள் சாதனம் பின்வரும் Apple கணக்குத் தகவல்களைப் பயன்படுத்தும்: பிறந்ததேதி, நாடு அல்லது வட்டாரம், குடும்பக் குழுவில் உறுப்பினர் நிலை மற்றும் பொறுப்பு. சாதனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, உங்களுக்கோ உங்கள் சாதனத்திற்கோ ஸ்கிரீன் டைம் பாஸ்கோடு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற விவரம் ஆகியவற்றையும் உங்கள் சாதனம் சரிபார்க்கும்.
செயலிகள் கோரும்போது அவற்றுடன் உங்கள் வயது வரம்பைப் பகிர்வதற்குச் செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் மூன்று உள்ளமைவுகளை வழங்குகிறது: பகிரும் முன் கேள், எப்போதும் மற்றும் வேண்டாம். உங்கள் வயது வரம்பைப் பகிர வேண்டுமா என்பதை “பகிரும் முன் கேள்” விருப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு செயலிக்கும் நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். “எப்போதும்” என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் வயது வரம்பைக் கோரும் அனைத்துச் செயலிகளுடனும் அது தானாகவே பகிரப்படும். “வேண்டாம்” என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் வயது வரம்பு செயலிகளுடன் பகிரப்படாது. செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற தகவல் மற்றும் பகிர்தல் உள்ளமைவு (“பகிரும் முன் கேள்”, “எப்போதும்” அல்லது “வேண்டாம்”) உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டு, இந்த அம்சத்தை ஆதரிக்கும் சாதனங்களில் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி ஒத்திசைக்கப்படும்.
நீங்கள் வயது வந்தவர், 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய (அல்லது உங்கள் நாடு அல்லது வட்டாரத்தில் அதற்குச் சமமான வயதுடைய) பதின்ம வயதினராக இருந்து, iOS அல்லது iPadOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் குடும்பக் குழுவில் இல்லையென்றால், செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தை நீங்களே செயல்படுத்தி உள்ளமைக்கலாம். “பகிரும் முன் கேள்” என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு என்பதற்குச் சென்று செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தைச் செயல்படுத்தலாம் மற்றும் உங்கள் பகிர்தல் விருப்பத்தேர்வுகளை மாற்றலாம்.
குடும்பக் குழுவில் உள்ள சிறார்களும் பதின்ம வயதினரும் மற்றும் செயலிகளுக்கான வயது வரம்பு
நீங்கள் குடும்பக் குழுவில் இருக்கும் சிறார் அல்லது பதின்ம வயதினர் என்றால், உங்கள் குடும்பக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர் (கூட்டாக, “பெற்றோர்/பாதுகாவலர்”) மட்டுமே செயலிகளுக்கான வயது வரம்பை அமைக்க முடியும். அதைச் செய்வதற்கு முன், உங்கள் வயதை உறுதிசெய்யும்படி பெற்றோர்/பாதுகாவலரிடம் கேட்கப்பட்டு (உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட பிறந்ததேதி அடிப்படையிலானது), பின்னர் பகிர்வு உள்ளமைவுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு தெரிவிக்கப்படும்.
பெற்றோர்/பாதுகாவலர் iOS அல்லது iPadOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தினால், தங்கள் சாதனத்தில் அமைப்புகள் > குடும்பம் > [சிறார் அல்லது பதின்ம வயதினரின் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு என்பதற்குச் சென்று உங்களுக்குச் செயலிகளுக்கான வயது வரம்பை அமைக்கலாம். ஸ்கிரீன் டைம் பாஸ்கோடு உங்களுக்குச் செயல்படுத்தப்பட்டிருந்தால், பெற்றோர்/பாதுகாவலர் உங்கள் சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு என்பதற்குச் சென்று ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிட்டு, செயலிகளுக்கான வயது வரம்பை அமைக்கலாம்.
குடும்பப் பகிர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு (ஒருங்கிணைப்பாளர், பெற்றோர்/பாதுகாவலர், வயது வந்தவர், சிறார் போன்ற குடும்பக் குழுவில் உள்ள பொறுப்புகள் பற்றிய தகவல்கள் உட்பட), www.apple.com/in/legal/privacy/data/en/family-sharing இணையதளத்தைப் பாருங்கள். குடும்பப் பகிர்வு தொடர்பாக வயது வரம்புகளை Apple பயன்படுத்தும் விதம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, support.apple.com/102617 இணையதளத்தைப் பாருங்கள். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்புகள் பயனரின் Apple கணக்கு இணைக்கப்பட்டுள்ள நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
செயலிகளுடன் பகிர்தல்
வயது வரம்பிற்கான கோரிக்கைகள்
செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் செயல்படுத்தப்பட்டு, “பகிரும் முன் கேள்” அல்லது “எப்போதும்” என உள்ளமைக்கப்பட்டிருந்தால், செயலி அதன் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள வயது வரம்புகளையும் உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய பிறந்ததேதியையும் உங்கள் சாதனம் பயன்படுத்தி உங்கள் வயது வரம்பைத் தீர்மானிக்கும். டெவலப்பருடன் பகிர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, அதாவது உங்கள் நாடு அல்லது வட்டாரத்தில் “வயது வந்தவர்” என்று கருதப்படுவதற்கான வயதைத் தீர்மானிப்பதற்காக, உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட நாடு அல்லது வட்டாரத்தையும் உங்கள் சாதனம் சரிபார்க்கும்.
ஒரு செயலியுடன் உங்கள் வயது வரம்பைப் பகிர்வதற்கு நீங்கள் தேர்வுசெய்தால், வயது வரம்பைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்ட வயது உங்களால் உறுதிசெய்யப்பட்டதா (நீங்கள் வயது வந்தவர் அல்லது குடும்பக் குழுவில் இல்லாத பதின்ம வயதினர் என்றால்) அல்லது உங்கள் பெற்றோர்/பாதுகாவலரால் உறுதிசெய்யப்பட்டதா (நீங்கள் குடும்பக் குழுவில் இருக்கும் சிறார் அல்லது பதின்ம வயதினர் என்றால்) என்பதைச் சாதனம் குறிப்பிடும். நீங்கள் குடும்பக் குழுவில் இருக்கும் ஒரு சிறார் அல்லது பதின்ம வயதினர் என்றால், Apple வழங்கும் குறிப்பிட்ட சில பெற்றோர் கட்டுப்பாடுகள் உங்களுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்ற தகவலையும் சாதனம் குறிப்பிடலாம், இதனால் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காகச் செயலி கூடுதல் கருவிகளைப் பயன்படுத்த முடியும்.
செயலிகளுக்கான வயது வரம்பு அம்சம் செயல்படுத்தப்பட்டு உள்ளமைக்கப்படவில்லை என்றால் அல்லது நீங்கள் பகிர்வதற்கு மறுத்தால், இந்த அம்சம் கிடைக்கவில்லை அல்லது உங்கள் வயது வரம்பைப் பகிர்வதற்கு நீங்கள் மறுத்துவிட்டதாக உங்கள் சாதனம் குறிப்பிடும்.
சாதனத்தின் பதிலில் தனிப்பட்ட தரவு இருக்காது என்றாலும், செயலி பதிலைப் பெற்ற பிறகு, செயலியின் டெவலப்பர் தனியாகச் சேகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுடன் (அவரது செயலியை நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்தும் விதம் போன்றவை) அதைத் தொடர்புபடுத்தக்கூடும். பதில் மற்றும் பிற தகவல்களைச் செயலி செயலாக்குவதைச் செயலி டெவலப்பரின் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் நிர்வகிக்கும்.
வயது வரம்பைக் கோருவதற்கான கட்டுப்பாடுகள்
ஒவ்வொரு செயலியின் கோரிக்கைக்கும் உங்கள் பதில்களைச் சாதனம் பதிவுசெய்து வைக்கும். இதில் செயலியின் பெயர், வயது வரம்பு பகிரப்பட்டதா என்ற விவரம் மற்றும் தேதி, பகிரப்பட்ட உண்மையான வயது வரம்பு (நீங்கள் பகிர்வதற்குத் தேர்வுசெய்தால்) போன்றவை அடங்கும். இந்த அம்சத்தை ஆதரிக்கும் அனைத்துச் சாதனங்களிலும் இந்தத் தகவல் முழுமையான என்கிரிப்ஷன் மூலம் ஒத்திசைக்கப்படும், இதை Apple படிக்க முடியாது. புதிய வயது வரம்பை டெவலப்பர்களுடன் எப்போது பகிரலாம் என்ற கட்டுப்பாடுகளை விதிக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ள “வயது வரம்பை மீண்டும் பகிர்” அம்சத்தை வழங்க மற்றும் டெவலப்பர்கள் வயது வரம்பைக் கோரும்போது உங்களுக்குத் தெரிவிக்க மிகச் சமீபத்திய பதிவு பயன்படுத்தப்படும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு அல்லது அமைப்புகள் > [செயலியின் பெயர்] > செயலிகளுக்கான வயது வரம்பு அல்லது அமைப்புகள் > செயலிகள் > [செயலியின் பெயர்] > செயலிகளுக்கான வயது வரம்பு என்பதற்குச் சென்று உங்கள் சாதனத்தில் உள்ள ஒவ்வொரு செயலிக்குமான மிகச் சமீபத்திய பதிவைப் பார்க்கலாம்.
வயது வரம்பை மீண்டும் பகிர்
செயலிகளுக்கான வயது வரம்பு அமைப்புகளில் உள்ள “வயது வரம்பை மீண்டும் பகிர்” அம்சத்தைப் பயன்படுத்தி மிகச் சமீபத்திய பதிவை நீங்கள் மீட்டமைக்கலாம். மீட்டமைத்த பின், டெவலப்பர்கள் கோரிக்கை விடுக்கும்போது பகிர்வதற்கான வயது வரம்பை Apple புதிதாகத் தீர்மானிக்கும். “வயது வரம்பை மீண்டும் பகிர்” அம்சத்தைப் பயன்படுத்த, அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு > [செயலியின் பெயர்] > வயது வரம்பை மீண்டும் பகிர் என்பதற்குச் செல்லவும். ஸ்கிரீன் டைம் பாஸ்கோடு செயல்படுத்தப்பட்டிருந்தால், புதிய வயது வரம்பைப் பகிர்வதற்கு முன் பாஸ்கோடு உள்ளிடப்பட வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வயது வரம்பிற்கான கோரிக்கைகள்
ஒரு செயலியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புகளை மாற்றி அந்தச் செயலி அதன் கோரிக்கையைப் புதுப்பித்தால், புதுப்பிக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாக செயலியுடன் வேறொரு வயது வரம்பைப் பகிர வேண்டியுள்ளதா என்பதைத் தீர்மானிக்க மிகச் சமீபத்திய பதிவைச் சாதனம் சரிபார்க்கும். பகிர வேண்டியிருந்தால், மிகச் சமீபத்திய பதிவைச் சாதனம் மீட்டமைத்து, செயலியில் இருந்து வரும் அடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதத்தில், “எப்போதும்” என உள்ளமைக்கப்பட்டிருந்தால் புதிய வயது வரம்பைத் தானாகப் பகிரும் அல்லது “பகிரும் முன் கேள்” என உள்ளமைக்கப்பட்டிருந்தால், புதிய வயது வரம்பிற்கான புதுப்பிக்கப்பட்ட கோரிக்கையைக் காட்டும். “எப்போதும்” என உள்ளமைக்கப்பட்டிருந்து, மிகச் சமீபத்திய பதிவில் உள்ள வயது வரம்புடன் ஒப்பிடும்போது புதிய வயது வரம்பு மிகத் துல்லியமானதாக இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
செயலிகளுக்கான வயது வரம்பை நிர்வகித்தல்
அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு அல்லது அமைப்புகள் > செயலிகள் > [செயலியின் பெயர்] > செயலிகளுக்கான வயது வரம்பு என்பதற்குச் சென்று செயலிகளுக்கான வயது வரம்பு அமைப்புகளின் பகிர்தல் உள்ளமைவுகளை எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம். ஸ்கிரீன் டைம் பாஸ்கோடு செயல்படுத்தப்பட்டிருந்தால், உள்ளமைவை மாற்றுவதற்கு முன் பாஸ்கோடு உள்ளிடப்பட வேண்டும். நீங்கள் குடும்பக் குழுவில் உள்ள ஒரு சிறார் அல்லது பதின்ம வயதினர் என்றால், உங்கள் குடும்பக் குழுவில் உள்ள பெற்றோர்/பாதுகாவலர் தங்கள் சாதனத்தில் அமைப்புகள் > குடும்பம் > [சிறார் அல்லது பதின்ம வயதினரின் பெயர்] > தனிப்பட்ட தகவல் > செயலிகளுக்கான வயது வரம்பு > செயலிகளுடன் பகிர் என்பதற்குச் சென்று உள்ளமைவை நிர்வகிக்கலாம்.
பகிர்தல் உள்ளமைவு புதுப்பிக்கப்பட்டால், அதன் பிறகு டெவலப்பர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க புதிய பகிர்தல் உள்ளமைவு பயன்படுத்தப்படும். பகிர்தல் உள்ளமைவை “எப்போதும்” என மாற்றுவது, இதற்கு முன்பு நீங்கள் வயது வரம்பைப் பகிர்வதற்கு மறுத்த செயலிகளுக்கான அனுமதியையும் மீட்டமைக்கும்.
உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட பிறந்ததேதியை மாற்ற விரும்பினால், உங்கள் சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல் என்பதற்குச் சென்று மாற்றலாம். உங்கள் குடும்பக் குழுவில் உள்ள சிறார் அல்லது பதின்ம வயதினருடன் இணைக்கப்பட்டுள்ள பிறந்ததேதியை மாற்ற விரும்பினால், உங்கள் சாதனத்தில் அமைப்புகள் > குடும்பம் > [சிறார் அல்லது பதின்ம வயதினரின் பெயர்] > தனிப்பட்ட தகவல் என்பதற்குச் சென்று மாற்றலாம். பிறந்ததேதியை மாற்றிய பிறகு, செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
வயது வரம்பைப் பகிர்வதற்கான வட்டாரக் கட்டுப்பாடுகள்
சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் உங்கள் வயது வரம்புத் தகவலைச் செயலிகள் கேட்கும்பட்சத்தில் பகிர, Apple நிறுவனம் சட்டப்படி கடமைப்பட்டுள்ளது. அந்த நாடுகள் அல்லது வட்டாரங்களில் ஒன்றில் உங்கள் Apple கணக்கு அல்லது சிறார்/பதின்ம வயதினரின் Apple கணக்கு இருக்கிறது எனத் தீர்மானிக்கப்பட்டால், செயலிகளுக்கான வயது வரம்பைப் பகிர்வதற்கான அமைப்பு “எப்போதும்” என அமைக்கப்படும், மேலும் இந்த உள்ளமைவை மாற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். உங்கள் வயது எவ்வாறு உறுதிசெய்யப்பட்டது என்பதையும், சில குறிப்பிட்ட வட்டாரத் தேவைகள் உங்களுக்குப் பொருந்துமா என்பதையும் உங்கள் சாதனம் பகிரும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்தில் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், உங்களுக்காக அல்லது நீங்கள் ஒரு பெற்றோர்/பாதுகாவலர் எனில் உங்கள் குடும்பக் குழுவில் உள்ள சிறாருக்காக இந்த அம்சத்தை அமைத்து வழங்கும் பொருட்டு எங்களின் அல்லது மூன்றாம் தரப்பின் நியாயமான நல நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்.
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- Apple கணக்குத் தகவல்கள் (உங்கள் பிறந்ததேதி, நாடு அல்லது வட்டாரம், குடும்பக் குழு உறுப்பினர் நிலை மற்றும் பொறுப்பு உள்ளிட்டவை)
- சாதனத் தகவல்கள் (உங்கள் சாதனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு உள்ளிட்ட தகவல்கள்)
தக்கவைத்தல்
Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
செயலிகளுக்கான வயது வரம்பு அம்சத்துடன் தொடர்புடைய உங்கள் தனிப்பட்ட தகவல் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ள விரும்பினால், நீங்கள் எங்களை www.apple.com/in/legal/privacy/contact என்ற பக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எப்போதுமே Apple தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
2025-12-12