Apple Card & தனியுரிமை

விண்ணப்பச் செயலாக்கம், அடையாளச் சரிபார்ப்பு, மோசடித் தடுப்பு ஆகியவற்றுக்காக உங்கள் விண்ணப்பத் தகவல்கள் Apple, Goldman Sachs நிறுவனத்துடனும் ஓர் அடையாளச் சரிபார்ப்புச் சேவை நிறுவனத்துடனும் பகிரப்படும்.
 

நீங்கள் உங்கள் நிதி நிலையில் கவனம் செலுத்த உதவியாக, உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு Apple Card வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் உங்கள் Apple Card விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கும் தகவல்கள் முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணைநிறுவனத்தாலும் Goldman Sachsஆலும் பயன்படுத்தப்படும் மற்றும் மூன்றாம் தரப்பு அடையாளச் சரிபார்ப்பு சேவை வழங்குநர்களுடன் பகிரப்படும்.
  • உங்கள் Apple Card பரிவர்த்தனை குறித்த தகவல்களை Goldman Sachs, Apple Card வழங்கும் வங்கி, Mastercard, Apple Cardஇன் குளோபல் பேமெண்ட் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் பெறுகின்றன, ஆனால் விளம்பரப்படுத்தல் அல்லது மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காகப் பரிவர்த்தனைத் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்குப் பகிர்வதோ விற்பனை செய்வதோ இல்லை.
  • செலவின் சுருக்கவிவரம் போன்ற Apple Card அம்சங்கள் உங்கள் இதுவரையான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தினால், அவை உங்கள் சாதனத்திலேயே செயலாக்கப்படும். இதுவரையான உங்கள் பரிவர்த்தனைகள் Appleக்குத் தெரியாது.

Apple Cardக்கு விண்ணப்பித்தல்

நீங்கள் Apple Cardக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் உங்கள் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல்கள், சாதன ஃபோன் எண் ஆகியவற்றை Apple மற்றும் Goldman Sachs Bank USA, Salt Lake City Branch (“Goldman Sachs”) பயன்படுத்தும். மேலும், உங்கள் கணக்கை அமைப்பதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் Goldman Sachs இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும். உரிமையாளரின் பகுதியளவு அல்லது முழு சமூகப் பாதுகாப்பு எண்ணையும் குடியுரிமையையும் சரிபார்க்க Goldman Sachs ஒரு மூன்றாம் தரப்பு அடையாளச் சரிபார்ப்புச் சேவை வழங்குநரைப் பயன்படுத்தும்; Apple இந்தத் தகவல்களைப் படிக்கவோ சேமிக்கவோ செய்யாது.

உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடியை ஸ்கேன் செய்யும்படி உங்களிடம் கேட்கப்படலாம். உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் உங்கள் புகைப்பட ஐடியின் படம் பாதுகாப்பான முறையில் ஒரு மூன்றாம் தரப்பு அடையாளச் சரிபார்ப்புச் சேவை வழங்குநருக்கு அனுப்பப்படும். Apple உங்கள் புகைப்பட ஐடியின் படத்தைப் படிக்கவோ சேமிக்கவோ செய்யாது, ஆனால் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் Apple Card விண்ணப்ப மோசடிகளைத் தடுப்பதற்காகவும் உங்கள் புகைப்பட ஐடியில் இருந்து உங்கள் பெயர் மற்றும் முகவரியைப் பெறும்.

உங்களுக்கு கிரெடிட் வழங்குவதா வேண்டாமா என்பதையும் கிரெடிட் தொகையையும் தீர்மானிக்க உதவ உங்கள் ஆண்டு வருமானம் குறித்த மதிப்பீட்டை Goldman Sachs நிறுவனத்திடம் வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். Apple உங்கள் ஆண்டு வருமானத்தைப் படிக்கவோ சேமிக்கவோ செய்யாது.

நீங்கள் Apple Card விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையில் கிரெடிட் குறித்த முடிவை எடுப்பதற்காக உங்கள் விண்ணப்பம் Goldman Sachs நிறுவனத்துக்குச் சமர்பிக்கப்படாது. உங்கள் விண்ணப்பத்தைச் செயலாக்க Goldman Sachs நிறுவனத்துக்குக் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், உங்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்கள் உங்கள் சாதனத்தில் 30 நாட்கள் வரை சேமிக்கப்படும். விண்ணப்பச் செயல்முறையின்போது எந்த இடத்தில் இடைநிறுத்தினீர்கள் என்ற தகவலை Apple சேகரிக்கும், நீங்கள் விண்ணப்பத்தை முடிக்கவில்லை என்று உங்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் உதவி வழங்குவதற்காகவும் Apple அல்லது Goldman Sachs உங்களைத் தொடர்புகொள்ளலாம்.

நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தி இருந்தால், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது மோசடித் தடுப்புக்காக உங்கள் தோராயமான இருப்பிடத் தகவல் Apple மற்றும் Goldman Sachsஆல் பயன்படுத்தப்படும். நீங்கள் Apple Payஇல் ஏதேனும் பேமெண்ட் முறையைச் சேர்க்கும்போது, Apple Cardஐப் பெற விண்ணப்பிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது, அடையாளச் சரிபார்ப்பு மற்றும் மோசடித் தடுப்புக்காக குறிப்பிட்ட சாதன அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற தகவல்களும், சாதனத்தைப் பயன்படுத்தும் விதமும் (எடுத்துக்காட்டாக, சாதனம் நகர்வில் இருந்த நேரத்தின் சதவீதம் அல்லது ஒரு வாரத்தில் மேற்கொண்ட அழைப்புகளின் தோராய எண்ணிக்கை) Appleக்கு அனுப்பப்படலாம். மோசடியைத் தடுப்பதற்காக உங்கள் விண்ணப்பத்தில் உள்ள ஃபோன் எண் பற்றிய தகவலையும் உங்கள் நெட்வொர்க் வழங்குநரிடம் இருந்து Apple பெறக்கூடும்.

நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் Goldman Sachs வழங்கும் குறிப்பிட்ட Apple Card திட்டங்களுக்குத் தகுதிபெறக்கூடும். பங்கேற்பதற்கான அழைப்பைப் பெற்றுள்ளீர்களா மற்றும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா நிராகரிக்கிறீர்களா என்பது Appleக்குத் தெரியக்கூடும், திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக Apple அந்தத் தகவல்களை Goldman Sachs உடன் பகிரக்கூடும். திட்டத்தில் நீங்கள் பங்கேற்பது குறித்த கூடுதல் விவரங்கள் Appleக்குத் தெரியாது.

Apple Card சேவையை வழங்குதல்

Apple Payஇல் உங்கள் Apple Cardஐ அமைக்க உதவுவதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் Goldman Sachs அல்லது Mastercardக்குத் தகவல்களை Apple வழங்கலாம். இந்தத் தகவல்கள் Apple Payஇல் நீங்கள் ஏதேனும் ஒரு கார்டைப் பயன்படுத்தும் வழங்கும் தகவல்களில் இருந்து வேறுபட்டதல்ல, தகவல்களில் இவையும் அடங்கும்:

  • உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய பெயர் மற்றும் பில்லிங் முகவரி
  • உங்கள் Apple கணக்கு, iTunes மற்றும் App Store கணக்கின் செயல்பாடுகள் பற்றிய பொதுவான தகவல்கள் (எடுத்துக்காட்டாக, iTunesஇல் நீண்டகாலத்திற்குப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளீர்களா என்ற விவரம்)
  • உங்கள் சாதனம் பற்றிய தகவல்கள், Apple Watchஐப் பயன்படுத்தினால் இணைக்கப்பட்ட iOS சாதனத் தகவல் (எ.கா., சாதன அடையாளத் தகவல், ஃபோன் எண், உங்கள் சாதனப் பெயர், மாடல் போன்றவை)
  • கார்டைச் சேர்க்கும்போது நீங்கள் இருக்கும் தோராயமான இருப்பிடம் (இருப்பிடச் சேவைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால்)
  • கணக்கு அல்லது சாதனத்தில் இதுவரை சேர்த்த பேமெண்ட் கார்டுகள்
  • Apple Payஇல் நீங்கள் சேர்த்துள்ள அல்லது சேர்க்க முயன்ற பேமெண்ட் கார்டுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பான தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்

உங்களிடம் உள்ள அல்லது சமீபத்தில் வைத்திருந்த கார்டுகளைப் பிற சாதனங்களில் அமைக்க, கார்டுக்கான குறிப்பு ஒன்றை உங்கள் Apple கணக்கில் Apple சேமிக்கும். பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு கார்டை மீண்டும் சேர்க்க, கார்டு வழங்குநர் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிடம் அதை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த Apple Pay அம்சம் Apple Card உடன் கிடைக்கிறது.

Apple Card மூலம் பணம் செலுத்துதல்

Apple Cardஐப் பயன்படுத்தி செயலியில், இணையத்தில் அல்லது Apple Messages for Businessஇல் பேமெண்ட்டைத் தொடங்கும்போது, வரி மற்றும் ஷிப்பிங் கட்டணத்தைக் கணக்கிடுவதைச் செயலாக்க உங்கள் ஜிப் குறியீடு, அஞ்சல் குறியீடு அல்லது அதுபோன்ற பிற தகவல்கள் செயலி, இணையதளம் அல்லது வணிகத்திற்கு வழங்கப்படும். நீங்கள் பேமெண்ட்டை அங்கீகரித்த பிறகு, சாதனம் சார்ந்த கணக்கு எண், உங்கள் ஷிப்பிங் முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற வணிகத்தால் கோரப்பட்ட பிற தகவல்களும் வழங்கப்படும். வணிகத்தின் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டபடி உங்கள் பரிவர்த்தனை பற்றி தகவல்களை அவர்கள் தனியாகச் சேகரித்தும் பயன்படுத்தலாம், இதில் பரிவர்த்தனையின்போது உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களும் அடங்கும். உங்கள் சாதன இருப்பிடத்திற்கான அணுகல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/location-services இணையதளத்தில் “இருப்பிடச் சேவைகள் & தனியுரிமை” என்பதைப் பார்வையிடுங்கள்.

நீங்கள் Apple Payஐப் பயன்படுத்தும்போது உங்கள் Apple Card எண் வழங்கப்படாது. செயலிகள், இணையதளங்கள், Apple Messages for Business ஆகியவற்றுடன் உங்கள் பேமெண்ட் தகவலைப் பாதுகாப்பாகப் பரிமாற, தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleக்கு அனுப்பப்படும். சிறிது நேரத்திற்கு டிகிரிப்ட் செய்யப்பட்ட வடிவில் வைக்கப்பட்ட பிறகு அது வணிகம் சார்ந்த கீ மூலம் மீண்டும் என்கிரிப்ட் செய்யப்படும். இதனால் உங்கள் பேமெண்ட் தகவலை வணிகம், டெவலப்பர் அல்லது பேமெண்ட்டைச் செயலாக்குபவர் மட்டுமே டிகிரிப்ட் செய்ய முடியும். கார்டைச் சேர்க்கும் வசதியில்லாத Macஇன் மூலம் பேமெண்ட் செய்யப்படும்போது, Mac மற்றும் அங்கீகரிக்கும் சாதனம் இடையேயான தகவல்தொடர்பு Apple சர்வர்களில் உள்ள என்கிரிப்ட் செய்யப்பட்ட சேனல் வழியாக மேற்கொள்ளப்படும். உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வகையில் Apple இந்தத் தகவல்கள் எதையும் தக்கவைக்காது.

நீங்கள் Apple Cardஐப் பயன்படுத்தும்போது, Apple Cardஐ இயக்குவதற்காக எங்கள் வழங்குநர் வங்கிக்கும் பேமெண்ட் நெட்வொர்க் கூட்டாளருக்கும் (Goldman Sachs மற்றும் Mastercard) அவர்களின் சேவை வழங்குநர்களுக்கும் உங்கள் பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் அனுப்பப்படும், இதில் வணிகம், நேரம், தொகை ஆகியவையும் அடங்கும். Goldman Sachs அல்லது Mastercard விளம்பரப்படுத்தல் அல்லது மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக உங்கள் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்புக்குப் பகிரவோ விற்கவோ செய்யாது.

Apple ஒவ்வொரு பரிவர்த்தனைத் தகவலையும் உங்கள் Apple கணக்கில் வழங்கிச் சேமிக்கும், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் இதுவரையான பரிவர்த்தனைகளைப் புதுப்பித்த நிலையில் வைக்கும். உங்கள் பரிவர்த்தனைகள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி iCloudஇல் சேமிக்கப்படுகின்றன, இது உங்கள் தரவுக்கு உயர்நிலைப் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் சாதனத்தின் தனித்துவமான தகவலுடன் உங்கள் சாதனத்தின் பாஸ்கோடை இணைத்து உருவாக்கப்படும் கீயால் உங்கள் தனிப்பட்ட தரவு பாதுகாக்கப்படும், அந்த கீ உங்களுக்கு மட்டுமே தெரியும். இதுவரையான பரிவர்த்தனைகளை உங்கள் சாதனத்தால் அணுகவும் படிக்கவும் முடியும், ஆனால் இந்தத் தகவல்களை Appleஆல் அணுக முடியாது. செலவின் சுருக்கவிவரம் போன்ற Apple Card அம்சங்கள் உங்கள் இதுவரையான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தினால், அவை உங்கள் சாதனத்திலேயே செயலாக்கப்படும்.

Apple Card குடும்பம்

Apple Card வாடிக்கையாளர்கள் தங்கள் iCloud குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள தகுதியுடைய உறுப்பினர்களை இணை உரிமையாளர் அல்லது பங்கேற்பாளராக அழைப்பதன் மூலம் தங்கள் Apple Cardஐப் பகிரலாம். வாலெட்டில் Apple Card பாஸின் பின்பக்கத்தைப் பார்த்து Apple Card குடும்ப அழைப்பு நிலையை எப்போது வேண்டுமானாலும் அறிந்துகொள்ளலாம். அழைப்பை நிர்வகிக்க உதவுவதற்காக அழைப்பின்போது, ஒரு சலுகை மறுஆய்வுக்குத் தயாராக இருக்கும்போது, ஓர் அழைப்பு அல்லது சலுகைக்கு இணை உரிமையாளரோ பங்கேற்பாளரோ பதிலளிக்கும்போது இணை உரிமையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு வாலெட் விழிப்பூட்டலை அனுப்பும்.

இணை உரிமைக் கணக்குகள்: ஓர் இணை உரிமையாளரைச் சேர்க்க, Apple Card வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இணை உரிமையாளராகச் சேர்க்க விரும்பும் நபரைக் குடும்பப் பகிர்வுக் குழுவின் தகுதியுடைய உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் குடும்பப் பகிர்வுக் குழு உறுப்பினருக்கு இணை உரிமைக்கான அழைப்பை Apple அனுப்பும், அத்துடன் அழைத்தவரின் Apple Card தகவல்களையும் பகிரும். அழைக்கப்படும் நபரிடம் Apple Card இல்லாவிட்டால் மேலே விவரிக்கப்பட்டபடி விண்ணப்பத் தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும். இணை உரிமை Apple Card கிரெடிட் லைனை மதிப்பீடு செய்ய Goldman Sachsக்கு உதவுவதற்கு ஏற்கெனவே Apple Card வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் தற்போதைய வருமானத் தகவல்களை வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள Apple Card பேலன்ஸ்களுக்கு இணை உரிமையாளர்கள் இருவரும் பொறுப்பாவார்கள் என்பதால், ஏற்கெனவே உள்ள பேலன்ஸ் தகவல்கள் இணை உரிமை Apple Card சலுகை விதிமுறைகளின் ஒரு பகுதியாக வெளிப்படுத்தப்படும். இணை உரிமை கணக்கு உருவாக்கப்பட்டால், ஒவ்வொரு இணை உரிமையாளரும் Goldman Sachsஐத் தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குகளில் இருந்து முந்தைய பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரலாம்; சமீபத்திய பரிவர்த்தனைகள் சாதனத்திலேயே கிடைக்கும். இணை உரிமை Apple Card சலுகை மறுஆய்வுக்குத் தயாராக இருக்கும்போது, சலுகை விதிமுறைகளுக்கு அவர்களின் எதிர்கால இணை உரிமையாளர் பதிலளிக்கும்போது இணை உரிமை Apple Card விண்ணப்பதாரர்களுக்கு Apple விழிப்பூட்டலை அனுப்பும். இனி கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் அனைத்திற்கும் இணை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் அணுகலைக் கொண்டிருப்பார்கள். பேலன்ஸ் விவரங்கள் இணை உரிமையாளர்கள் இருவருக்கும் காட்டப்படும், இதில் கிடைக்கும் கிரெடிட், மொத்த பேலன்ஸ், கிரெடிட் வரம்பு ஆகியவை அடங்கும்.

பங்கேற்பாளர் கணக்குகள்: ஒரு பங்கேற்பாளரைச் சேர்க்க, Apple Card உரிமையாளர்கள் தங்கள் கணக்கில் பங்கேற்பாளராகச் சேர்க்க விரும்பும் நபரைக் குடும்பப் பகிர்வுக் குழுவின் தகுதியுடைய உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். உரிமையாளரின் Apple Cardஐப் பகிர்வதற்கான அழைப்பைக் குடும்பப் பகிர்வுக் குழுவின் உறுப்பினருக்கு அனுப்ப வழங்கப்பட்ட தகவல்களை Apple பயன்படுத்தும். பங்கேற்பாளர் 18 வயதுக்கு உட்பட்டவர் எனில், பங்கேற்பாளரின் சட்டப்பூர்வப் பெயரையும் பிறந்ததேதியையும் சரிபார்க்கும்படி வயதுவந்த உரிமையாளரிடம் கேட்கப்படும்; பங்கேற்பாளர் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் எனில், தங்களின் சட்டப்பூர்வப் பெயர், பிறந்த தேதி, வீட்டு முகவரி ஆகியவற்றை உறுதிசெய்யும்படி பங்கேற்பாளரிடம் கேட்கப்படும். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் தகவல்கள் நுகர்வோர் அறிக்கையிடல் முகமையிடம் இருக்கும் தங்களைப் பற்றிய கோப்புகளில் சேர்க்கப்பட வேண்டுமென விரும்பினால், பங்கேற்பாளர் கணக்கை அமைக்கும்போது தங்களின் சமூகப் பாதுகாப்பு எண்ணை Goldman Sachsக்கு வழங்கலாம். பங்கேற்பாளர் பதிவுச் செயல்முறையின் ஒரு பகுதியாக Goldman Sachsக்கு வழங்கப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு பங்கேற்பாளர் பதிவு முடியும் வரையில் அல்லது 30 நாட்கள் முடியும் வரையில் Appleஆல் சேமித்து வைக்கப்படும். Apple Card கணக்கை அமைக்கவும், மோசடித் தடுப்புக்காகவும் நிறைவுசெய்த பங்கேற்பாளர் பதிவுத் தகவல்கள் அவற்றுடன் உரிமையாளர் மற்றும் பங்கேற்பாளரின் Apple கணக்குத் தகவல்கள் Goldman Sachsக்கு அனுப்பப்படும்.

உரிமையாளர்கள் வாலெட்டில் உள்ள தங்கள் Apple Card பாஸின் பின்பக்கத்தில் பங்கேற்பாளரின் பெயரைத் தேர்ந்தெடுத்து “பேலன்ஸ் விவரங்களைக் காட்டு” என்பதைச் செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் கிரெடிட், மொத்த பேலன்ஸ், கிரெடிட் வரம்பு போன்ற பேலன்ஸ் விவரங்களைப் பங்கேற்பாளருடன் பகிரலாம். பேலன்ஸ் தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் உரிமையாளர்களே பொறுப்பானவர்கள் என்பதால், பிற உரிமையாளர்கள் அல்லது பங்கேற்பாளர்களின் பரிவர்த்தனைச் செயல்பாடுகளை அவர்களால் பார்க்க முடியும், அதேநேரம் பங்கேற்பாளர்களால் தாங்கள் செய்யும் பரிவர்த்தனைத் தகவல்களை மட்டுமே பார்க்க முடியும். உரிமையாளர்கள் பங்கேற்பாளர்களுக்கான பரிவர்த்தனை வரம்பையும் தேர்ந்தெடுக்கலாம், வாலெட்டில் தங்கள் Apple Card பாஸின் பின்பக்கத்தில் பங்கேற்பாளர்களின் பெயரைத் தேர்ந்தெடுத்து, “பரிவர்த்தனை வரம்பு” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம்.

அறிவிப்புகள்: வாலெட்டில் தங்கள் Apple Card பாஸின் பின்பக்கத்தில் இணை உரிமையாளர் அல்லது பங்கேற்பாளரின் பெயரைத் தேர்ந்தெடுத்து அறிவிப்புகளைச் செயல்படுத்துவது அல்லது முடக்குவதன் மூலம் Apple Card குடும்பக் கணக்குகளின் செயல்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை உரிமையாளர்கள் நிர்வகிக்கலாம். குறிப்பிட்ட வரையறைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அறிவிப்புகளைப் பெறும் வகையிலும் உரிமையாளர்கள் இதை அமைக்கலாம், எடுத்துக்காட்டாக ஒரு பரிவர்த்தனை குறிப்பிட்ட தொகையைத் தாண்டும்போது அறிவிப்புப் பெறுதல். அறிவிப்புகளை நிர்வகிப்பதற்கு அறிவிப்பு அமைப்புகள் பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தும்; கணக்கைப் பகிரும் மற்றவர்களுடன் அறிவிப்பு அமைப்புகள் பகிரப்படாது. பரிவர்த்தனை அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், வாங்கிய தேதியும் நேரமும், தொகை, வணிகம், (கிடைக்கும்பட்சத்தில்) இருப்பிடம் ஆகியவற்றைக் காட்டும் Push அறிவிப்பை உரிமையாளர்கள் பெறுவார்கள். பரிவர்த்தனை வரம்பைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பற்றிய அறிவிப்புகளில் அந்தப் பங்கேற்பாளரின் மொத்த மாதாந்தரச் செலவுகளும் காட்டப்படும்.

Apple Card மற்றும் இருப்பிடம்

Apple Payஇல் உங்கள் Apple Cardஐப் பயன்படுத்தினால், முகவரி, தொடர்புத் தரவு போன்ற வணிகம் குறித்த மேம்பட்ட தகவல்களை வழங்குவதற்காக வணிகம் மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்கள் உங்களுடன் இணைக்கப்படாத வகையில் உங்கள் சாதனத்தில் இருந்து Apple மேப்ஸுக்கு அனுப்பப்படும். நீங்கள் அட்டை வடிவிலான Apple Cardஐப் பயன்படுத்தினால், பரிவர்த்தனைக்கான சரியான வணிகத்தை அடையாளம் காண Apple மேப்ஸுக்கு உதவுவதற்காக உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை நீங்கள் பயன்படுத்தலாம். வாலெட்டில் இருப்பிடச் சேவைகளை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், மோசடியை அடையாளம் கண்டு தடுக்க Apple Cardஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான இருப்பிடத் தகவல்களை Apple பயன்படுத்தலாம், இதில் அட்டை வடிவிலான Apple Cardஐ ஆர்டர் செய்தல், மாற்றுதல், பேலன்ஸ் பேமெண்டைத் திட்டமிடுதல் போன்றவற்றின் போதான உங்கள் இருப்பிடத் தகவல்களும் அடங்கும். இருப்பிடச் சேவையைச் செயல்படுத்தவில்லையெனில் நீங்கள் Apple Cardஐப் பயன்படுத்தும்போது Apple உங்கள் இருப்பிடத் தகவல்களைச் சேகரிக்காது. நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு Apple Card மூலம் பணம் செலுத்தினால், மோசடித் தடுப்புச் சேவையை வழங்கும் மூன்றாம் தரப்பு வழங்குநரிடமிருந்து இருப்பிடத் தரவுகளை Goldman Sachs பெறக்கூடும், Goldman Sachs இந்தத் தரவுகளை மோசடித் தடுப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும்.

Apple Card மற்றும் பகுப்பாய்வுகள்

Apple Cardஐ மேம்படுத்துவதற்காக, Apple Card விண்ணப்பச் செயல்முறை மற்றும் வாலெட் செயலியில் உள்ள Apple Card அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை Apple சேகரித்து, அந்தத் தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாத வகையில் சேமிக்கும். இந்தத் தகவல்களில் விண்ணப்பத்தை நிறைவுசெய்ய ஆகும் நேரம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் Apple Card அம்சங்கள், மாதாந்தரச் செயல்பாடுகளின் பட்டியல் போன்றவை அடங்கும். பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

நிதிசார்ந்த முன்கணிப்பு போன்ற உள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக, நீங்கள் Apple Card வைத்திருக்கும் விவரம் போன்ற Apple சம்பந்தப்பட்ட உங்கள் கணக்கு தொடர்பான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். கிரெடிட் குறித்து முடிவெடுப்பதில் Goldman Sachsக்கு உதவக்கூடிய Apple அளவீடுகளை அடையாளம் கண்டு Apple Card சேவையை மேம்படுத்த Apple உடனான உங்கள் தொடர்பு குறித்த தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும், இதில் நீங்கள் வாங்கிய Apple தயாரிப்புகள், உங்கள் Apple கணக்கை எவ்வளவு காலமாகப் பயன்படுத்துகிறீர்கள், Apple உடன் எத்தனை முறை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள் என்பன போன்ற தகவல்களும் அடங்கும். தொடர்புடைய Apple அளவீடுகளை அடையாளம் காண்பதற்காக Apple உடனான உங்கள் தொடர்பு குறித்த தனிப்பட்ட தரவுகள் எதுவும் Goldman Sachs உடன் பகிரப்படாது. “Apple Relationship Data and Apple Card” என்ற தலைப்புடன் dpo@apple.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்கள் தனியுரிமைக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பி Apple உடனான உங்கள் தொடர்புகள் குறித்த தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை விலக்கிக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் மற்றும் கார்டு வைத்திருப்போர் கிரெடிட் பெறுவதற்காகத் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மறுமதிப்பீடு செய்ய அல்லது தங்களின் கிரெடிட் லைனை அதிகரிப்பதற்காக Goldman Sachs உடன் அடையாளம் காணப்பட்ட அளவீடுகளைப் பகிரலாம்.

Apple Card மற்றும் தகவல்தொடர்புகள்

ஒரு மெசேஜ் (மார்க்கெட்டிங் மெசேஜ் உட்பட) உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதற்காக நீங்கள் Apple Cardக்கு விண்ணப்பித்துள்ளீர்களா அல்லது உங்களிடம் Apple Card உள்ளதா என்ற உங்கள் Apple Card நிலை பற்றிய தகவலை Apple பயன்படுத்தக்கூடும். Apple உங்கள் சாதனத்துக்கு மெசேஜ்கள் அனுப்பக்கூடும். ஒரு மெசேஜ் உங்களுக்குத் தொடர்புடையதா என்பதை உறுதிசெய்வதற்காக உங்கள் இதுவரையான பரிவர்த்தனைகள், இருப்பிடம் போன்ற உங்களுக்குத் தெரிந்த, உங்கள் சாதனத்தில் உள்ள ஆனால் Appleக்குத் தெரியாத தகவல்கள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, பயணம் சம்பந்தப்பட்ட வாங்குதல்களை மேற்கொள்ளும் நபர்கள் விரும்பக்கூடிய மெசேஜை Apple உங்கள் சாதனத்துக்கு அனுப்பலாம். இதற்கு, பயணம் தொடர்பாக எதையேனும் வாங்கியுள்ளீர்களா என்ற தகவல் Appleக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை, உங்கள் இதுவரையான பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அந்த மெசேஜ் உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை உங்கள் சாதனமே தீர்மானிக்கலாம். உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், உங்களுக்குத் தொடர்புடைய தகவல்களை நீங்கள் பெறுவதை உறுதிசெய்யவும் இது உதவுகிறது. உங்கள் சாதனத்தில் எந்தெந்த மெசேஜ்களைப் பார்க்கிறீர்கள் என்பது Appleக்குத் தெரியாது.

உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத, அடையாளம் தெரியாத மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்கள் Apple Card மார்க்கெட்டிங் மற்றும் பிற மெசேஜ்களை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சலில் உள்ள சந்தா விலகல் இணைப்பை கிளிக் செய்து அல்லது Apple Card அறிவிப்புகளை ஆஃப் செய்து மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

உங்களிடம் Apple Card உள்ளதா என்பதை Apple செயலிகள் மற்றும் இணையதளங்களால் பார்க்க முடியும்

Apple Payஐச் செயல்படுத்தியுள்ளீர்களா என்பதைப் பார்க்கக்கூடிய Apple செயலிகள் மற்றும் இணையதளங்களால் உங்களிடம் Apple Card உள்ளதா என்பதையும் பார்க்க முடியும். iOS மற்றும் Safariஇல், உங்கள் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்களிடம் Apple Card உள்ளதா என்பதை Apple செயலிகள் மற்றும் இணையதளங்கள் பார்க்கும் அம்சத்தை நீங்கள் முடக்கலாம். iOSஇல், அமைப்புகள் > செயலிகள் > Safari என்பதற்குச் சென்று “Apple Pay உள்ளதா என்று பார்” என்பதைத் தட்டி இதை ஆஃப் செய்யுங்கள். Macஇல், Safari > அமைப்புகள் > மேம்பட்டது என்பதற்குச் சென்று “Apple Pay மற்றும் Apple Card உள்ளதா என்று பார்க்க இணையதளங்களை அனுமதி” என்பதைத் தேர்வுநீக்கவும்.

Daily Cash

உங்களிடம் Apple Cash இருந்தால், உங்கள் Apple Card Daily Cash விநியோகங்கள் உரிமம் பெற்ற பணப்பரிமாற்ற நிறுவனமான Apple Payments Inc. மூலம் செயலாக்கப்படும், இது Apple Payments Services LLC நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். வாலெட்டைத் திறந்து, உங்கள் Apple Cash கார்டில் உள்ள “மேலும்” பட்டனைத் தட்டி, பிறகு “உங்கள் தரவு எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்” என்பதைத் தட்டுவதன் மூலம் Apple Payments Inc. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் விதம் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Apple Card உதவி மையம்

Apple Card பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், வாலெட் செயலியில் இருந்து மெசேஜ் அனுப்பி உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்காக நீங்கள் பகிரும் தகவல்களை Apple பயன்படுத்தும், இதில் உங்கள் தனிப்பட்ட தரவும் அடங்கும். சேவையை வழங்குவதற்காக உங்கள் விசாரணை Goldman Sachsக்கு அனுப்பப்பட வேண்டும் எனில், Apple உங்களைப் பற்றிய தகவலையும் உங்கள் விசாரணையையும் Goldman Sachs உடன் பகிரும், இதன் மூலம் அவர்கள் இன்னும் சிறப்பாக உங்களுக்கு உதவக்கூடும். சேவைக்காக Goldman Sachsக்கு அனுப்பும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய நிதித் தகவல்களை Apple தக்கவைக்காது. நீங்கள் 877-255-5923 என்ற எண்ணில் உதவி மையத்தை நேரடியாக அழைத்தும் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

உங்கள் Apple Card கணக்கை மூடுதல்

உங்கள் Apple Card கணக்கை மூடினால், வாலெட் செயலியில் இருந்து Apple Cardஐ அகற்றும் வரையில் Apple Card கணக்கு பற்றிய தகவல்கள் வாலெட்டிலேயே இருக்கும்.

உங்கள் தகவல்களைப் புதுப்பித்தல்

உங்கள் Apple Card உடன் இணைக்கப்பட்டுள்ள விவரங்களைத் திருத்துவதன் மூலம் வாலெட்டில் உள்ள உங்கள் பில்லிங் முகவரியைப் புதுப்பிக்கலாம். நீங்கள் Goldman Sachsஐத் தொடர்புகொண்டும் உங்கள் Apple Card கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கலாம். Apple Card சேவைகளை வழங்குவதற்காக Goldman Sachs புதுப்பிக்கப்பட்ட Apple Card கணக்குத் தகவல்களை Apple உடன் பகிரக்கூடும்.

Apple லைன் ஆஃப் கிரெடிட்

Apple லைன் ஆஃப் கிரெடிட் என்பது Apple Cardஇன் ஓர் அம்சம் ஆகும். நீங்கள் apple.com இணையதளத்தில் Apple Cardக்கு விண்ணப்பித்தால், Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சத்திற்கு நீங்கள் தகுதிபெறக்கூடும். இந்த வழியில் விண்ணப்பிக்கும்போது, தகுதி பெற்ற Apple சாதனத்தில் Apple Cardக்கு விண்ணப்பித்தால் உங்கள் தகவல்கள் செயலாக்கப்படும் விதத்தில் இருந்து வேறுபட்ட விதத்தில் உங்கள் தகவல்களில் சிலவற்றை Apple செயலாக்கக்கூடும்.

நீங்கள் apple.com இணையதளத்தில் Apple Cardக்கு விண்ணப்பித்து Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சத்திற்குத் தகுதிபெற்றால், உங்கள் விண்ணப்பம் இணையம் வழியாகச் சேகரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்படும். அடையாளச் சரிபார்ப்பு மற்றும் மோசடித் தடுப்புக்காக உங்கள் சாதனத்தின் ஃபோன் எண்ணிற்குப் பதிலாக உங்கள் விண்ணப்பத்தில் உள்ள ஃபோன் எண் பற்றிய தகவல்கள் Appleக்கு அனுப்பப்படலாம். அத்துடன், விண்ணப்பிக்கும்போது உங்கள் உலாவியின் வகை, IP முகவரி ஆகியவற்றை Apple சேகரிக்கும். மோசடியைத் தடுப்பதற்காக இந்தத் தகவல்களை Apple மற்றும் Goldman Sachs பயன்படுத்தும். உங்கள் விண்ணப்பத்தைச் செயலாக்க Goldman Sachs நிறுவனத்திற்குக் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், தகுதிபெற்ற சாதனத்தில் நீங்கள் Apple Cardக்கு விண்ணப்பிக்கும்போது சேமித்து வைக்கப்படுவதைப் போல, கூடுதல் தகவல்களை வழங்குவதற்காக விண்ணப்பம் பற்றிய தகவல்கள் உங்கள் சாதனத்தில் சேமித்து வைக்கப்படாது. Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சத்தை மேம்படுத்த, Apple Cardஇன் Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சம் தொடர்பான விண்ணப்பச் செயல்முறை பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும்.

Apple உடன் பரிவர்த்தனை செய்ய மட்டுமே Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சத்தைப் பயன்படுத்தலாம். Apple லைன் ஆஃப் கிரெடிட் மூலம் பணம் செலுத்தும்போது, வரி மற்றும் ஷிப்பிங் கட்டணத்தைக் கணக்கிடுவதற்காக உங்கள் அஞ்சல் குறியீடு அல்லது பிற இணையான தகவல்களை Apple பயன்படுத்தும். உங்கள் பரிவர்த்தனையைச் செயலாக்க உங்கள் விர்ச்சுவல் பேமெண்ட் கணக்கு எண், ஷிப்பிங் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவை பயன்படுத்தப்படலாம். Apple லைன் ஆஃப் கிரெடிட் துல்லியமான இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்தாது.

மின்னஞ்சல் அல்லது நீங்கள் Appleஐத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் பிற வழிகளின் மூலமாக Apple உங்களைத் தொடர்பு கொள்ளலாம். Apple Card சேவையைப் போலில்லாமல், உங்களுக்கும் உங்கள் சாதனத்திற்கும் மட்டுமே தெரிந்த தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்திற்கு Apple லைன் ஆஃப் கிரெடிட் பற்றிய மெசேஜ்களை Apple அனுப்பாது. நீங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சலில் உள்ள சந்தா விலகல் இணைப்பை கிளிக் செய்து Apple லைன் ஆஃப் கிரெடிட் மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

Apple லைன் ஆஃப் கிரெடிட் பற்றி உங்களுக்குக் கேள்வி இருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் புதுப்பிக்க அல்லது உங்கள் கணக்கை மூட விரும்பினால், 877-255-5923 என்ற எண்ணில் உதவி மையத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம். தகுதிபெறும் சாதனத்தில் Apple Cardக்கு விண்ணப்பித்த பிறகு வாலெட் செயலி மூலம் மெசேஜ் செய்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளும் அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

Apple Card இணைய போர்ட்டல்

உங்கள் Apple கணக்கு மூலம் card.apple.com இணையதளத்தில் உள்நுழைந்து Apple Card இணைய சேவை போர்ட்டலைப் பயன்படுத்தி Apple Card மற்றும் Apple லைன் ஆஃப் கிரெடிட் அம்சத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். பேமெண்ட் செய்ய, எந்த வங்கிக் கணக்கில் இருந்து பேமெண்ட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். இந்தத் தகவல்கள் உங்கள் பேமெண்ட்டைச் செயலாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்காக அல்லது சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல் மற்றும் அதுபோன்ற நோக்கங்களுக்காக, நீங்கள் அனுப்பும் அல்லது திட்டமிடும் பேமெண்ட் போன்ற போர்ட்டலில் நீங்கள் செய்யும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை Apple சேகரித்துப் பயன்படுத்தும். உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்குத் தேவைப்படும் இடங்களில் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட தகவல்கள் Goldman Sachs உடன் Apple பகிரக்கூடும். Apple Card சேவையை மேம்படுத்துவதற்காக, போர்ட்டலை நீங்கள் பயன்படுத்தும் விதம் பற்றிய உங்களுடன் இணைக்கப்படாத தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

மேலும் தகவல்

நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பிறகும் கூட, சட்டத்துக்கு இணங்க அல்லது மோசடியைத் தடுக்கத் தேவைப்படும் சமயங்களில் உங்கள் Apple Card தொடர்பான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Apple உடனான உங்கள் உறவு பற்றிய தகவல்களை எங்கள் சேவை வழங்குநர்களுடனும் Apple பகிரக்கூடும். இந்த அறிக்கை மற்றும் Apple அறிவுறுத்தல்களின்படி தகவல்களைக் கையாள அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். பெறப்படும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும், சட்டரீதியாகத் தேவைப்படாவிட்டால் சேவைகளை வழங்கி முடித்ததும் தனிப்பட்ட தரவுகளை அவர்கள் கண்டிப்பாக நீக்க வேண்டும்.

சட்டரீதியாகத் தேவைப்படும் வகையிலும் மோசடியைத் தடுப்பதற்காகவும் Apple உங்கள் தகவல்களை Goldman Sachs உடன் பகிரக்கூடும். மோசடியைத் தடுப்பதற்காக Goldman Sachs நிறுவனத்திடம் இருந்து உங்கள் Apple Card தொடர்பான தகவல்களையும் Apple பெறக்கூடும். Goldman Sachs உங்கள் தனிப்பட்ட தகவல்களை எப்படிப் பாதுகாக்கிறது என்று அறிய அவர்களின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கலாம், இது https://www.goldmansachs.com/privacy-and-cookies இணையதளத்தில் உள்ளது. Apple நிறுவனமோ அதன் துணைநிறுவனங்களோ வங்கி கிடையாது. Goldman Sachsஇல் இருந்து பெறக்கூடிய அறிக்கைகளுடன் சேர்த்து கூடுதல் இணைப்பாக நீங்கள் இந்த அறிக்கையைப் பெறுகிறீர்கள்.

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி தனிப்பட்ட தரவுச் செயலாக்கம் தொடர்பான ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளராக Apple செயல்படும் இடங்களில், வேறு வகையில் குறிப்பிடப்படாத வரை அந்தச் செயல்பாடுகள் முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணைநிறுவனமான Apple Payments Services LLC நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும். Apple Cardஐப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு உங்கள் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12