Apple Games & தனியுரிமை
Apple Games உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- Apple Games செயலியை உங்களுக்கு வழங்குவதற்காக App Store, Apple Arcade, Game Center ஆகியவற்றில் உங்களைப் பற்றியுள்ள தகவல்களையும், உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களையும் Apple ஒருங்கிணைக்கிறது.
- உங்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கவும், தகவல்களை உங்களுக்கு அனுப்பவும் இந்தச் சேவைகளில் உங்கள் வாங்குதல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக App Store தரவு பயன்படுத்தப்படுவதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் கேம்ஸ் செயலியையும் இந்தச் சேவைகளையும் மேம்படுத்தவும் உகந்ததாக்கவும் இந்தச் சேவைகளுடனான உங்களின் செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
- மோசடியை அடையாளம் கண்டு தடுக்க உதவுவதற்காக, நீங்கள் பதிவிறக்க அல்லது வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண் கணக்கிடப்படும், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை அல்லது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல்களின் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள உண்மை மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
புதிய கேம்களைக் கண்டறியவும் லீடர்போர்டுகள் மற்றும் மல்டிபிளேயர் கேம்களில் பங்கேற்றல், நண்பர்களைக் கண்டறிதல், பார்த்தல், சவால் விடுதல், சாதனைகளைக் கண்காணித்தல் போன்ற கேம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும் Apple Games உங்களுக்கு உதவுகிறது.
உங்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக App Store, Apple Arcade, Game Center ஆகியவற்றில் இருந்தும், இவற்றை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பற்றிய தகவல்களையும், நீங்கள் தொடங்கும் கேம் தொடர்பான செயலிகளைப் பற்றி உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களையும் கேம்ஸ் செயலி ஒருங்கிணைக்கிறது. கேம்ஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்க, நீங்கள் Game Center கணக்கில் உள்நுழைந்து இந்தச் சேவைகளுக்கு இடையே உங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க Appleக்கு அனுமதி வழங்க வேண்டும். அமைப்புகள் > Apple Games என்பதற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று உங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், இந்தப் பிற சேவைகளில் இருந்து தகவல்களை Apple Games பயன்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் உங்களால் கேம்ஸ் செயலியைப் பயன்படுத்த முடியாது.
கேம்ஸ் செயலியை வழங்குதல்
நீங்கள் பதிவிறக்கிய கேம் தொடர்பான செயலிகளைப் பற்றிய தகவல்களையும் (App Store, Apple Games செயலிக்குள் மற்றும் Macஇல்), Game Center மற்றும் நீங்கள் மிகச் சமீபத்தில் விளையாடிய அல்லது தொடங்கிய செயலிகள் எவை என்பது பற்றி சாதனத்தில் உள்ள தகவல்களையும் கேம்ஸ் செயலி பயன்படுத்தி முகப்புத் தாவலிலும் உங்கள் கேம் லைப்ரரியிலும் அவற்றை எளிதாகக் கண்டறியும் அனுபவத்தை வழங்குகிறது. உங்கள் கேம்ஸ் செயலிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டுவதற்கும், நீங்கள் விட்ட இடத்திலிருந்தே எளிதாகத் தொடங்குவதற்கும் இந்தத் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
கேம்ஸ் செயலி அல்லது App Storeஇல் இருந்து நீங்கள் கேம் தொடர்பான செயலியைப் பதிவிறக்கும்போது உங்கள் Apple கணக்குடன் உங்கள் சாதனத்தின் வன்பொருள் ஐடி, IP முகவரி போன்ற அடையாளத் தகவல்களை Apple பதிவுசெய்கிறது. சில பகுதிகளில் சட்டரீதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள சில செயலிகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்யலாமா என்பதைத் தீர்மானிக்க, உங்கள் தோராயமான இருப்பிடத்தைக் கண்டறிவதற்கு உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை Apple பயன்படுத்தக்கூடும்.
சுயவிவரங்கள்
உங்கள் புனைபெயர், அவதார், நண்பர்கள் பட்டியல் ஆகியவை உட்பட உங்கள் Game Center சுயவிவரம் மற்றும் கேமிங் செயல்பாடுகள் கேம்ஸ் செயலிக்குள் கிடைக்கும். உங்கள் Game Center சுயவிவரம் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏதேனும் தனியுரிமை அமைப்புகளை நீங்கள் ஆன் செய்து வைத்திருந்தால் அது Apple Gamesக்கும் பொருந்தும். பிளேயரின் அவதாரில் தட்டினால் அந்த பிளேயரின் சுயவிவரப் பக்கம் திறக்கப்படும். சுயவிவரப் பக்கத்தில் இருந்து, நீங்கள் அவருடன் நண்பராக இல்லையெனில் நண்பராகச் சேர்வதற்குக் கோரிக்கை அனுப்பலாம், உங்களின் மற்றும் அவரின் சுயவிவர அமைப்புகள் அனுமதித்தால் அந்த பிளேயரை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
நண்பர்கள்
சவால்கள், ஒன்றாக இணைந்து விளையாடிய மல்டிபிளேயர் கேம்கள், கேம்கள் மற்றும் நண்பர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கேம்ஸ் செயலியில் நண்பர் பரிந்துரைகள் காட்டப்படும். அத்துடன், உங்கள் Game Center புனைபெயர் உங்கள் தொடர்பு கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபோன் எண் நண்பர்கள் உங்களைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும். உங்களின் தொடர்புகள் அவர்களின் Game Center புனைபெயரை அவர்களின் தொடர்பு கார்டுடன் இணைத்திருந்தால், உங்களுக்கான நண்பர்கள் பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கு சாதனச் செயலாக்கத்துடன் சேர்த்து அந்தத் தகவல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சவால்கள்
சவால்கள் என்பது Apple Games செயலியின் ஓர் அம்சமாகும். உங்களுக்குப் பிடித்த கேம்களை உங்கள் Game Center நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு இது அனுமதிக்கிறது. நண்பர் பரிந்துரைகள் மூலம் புதிய நண்பர்களை நீங்கள் கண்டறிய உங்களுக்கு உதவவும், சேர்ந்து விளையாடுவதற்கான சவால்களைப் பரிந்துரைக்கவும் நீங்கள் விளையாடும் அல்லது உங்களுக்கு விருப்பமான கேம்களை எந்த நண்பர்கள் விளையாடுகின்றனர் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்கள் Game Center நண்பர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம்.
வரைபடங்கள்
நீங்களும் பிறரும் விளையாடும் Game Center செயல்படுத்தப்பட்ட கேம்களைப் பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்கள், கேம்ஸ் செயலி மற்றும் App Storeக்குள் விளக்கப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
கேம்ஸ் செயலியைப் பிரத்தியேகமாக்குதல்
சிறப்பான கேமிங் அனுபவத்தை ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்குவதற்காக, கேம்ஸ் செயலிக்குள் உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தை நாங்கள் தனிப்பயனாக்குவோம். இதைச் செய்வதற்கு, App Store, Apple Arcade, Game Center ஆகியவற்றில் உங்களைப் பற்றியுள்ள தகவல்களையும், உங்கள் கேம்ஸ் செயலிப் பயன்பாட்டைப் பற்றி சாதனத்தில் உள்ள தகவல்களையும் பயன்படுத்துவோம்.
App Store
உங்களுக்கு மிகப் பொருத்தமான கேம்ஸைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதற்காக App Storeஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, App Store மற்றும் கேம்ஸ் செயலியில் இதற்கு முன்பு நீங்கள் தேடியவை, பார்த்தவை, பதிவிறக்கியவை, புதுப்பித்தவை அல்லது மதிப்பாய்வு செய்தவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமானதாகக் கருதும் கேம்கள் மற்றும் செயலிக்குள்ளான நிகழ்வுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள், நீங்கள் செயல்படுத்தும் புதிய சாதனங்கள் போன்று உங்கள் Apple கணக்கில் இருந்து பெறப்பட்ட கணக்குத் தகவல்களுடன் சேர்த்து நீங்கள் செயலியில் வாங்கியவை, சந்தாக்கள் போன்று இதுவரை நீங்கள் வாங்கியவை, பேமெண்ட் முறைகள் ஆகியவற்றையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். மேலும் சிறப்பான பரிந்துரைகளை வழங்க, செயலித் தொடக்கங்கள், நிறுவல்கள், Apple உடன் தங்கள் சாதனப் பகுப்பாய்வுகளைப் பகிரத் தேர்வுசெய்த பயனர்களிடமிருந்து பெற்ற நீக்குதல் போன்றவை பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களையும் செயலி மதிப்பீடுகள் பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். நீங்கள் App Store மற்றும் கேம்ஸைப் பயன்படுத்துவது பற்றி Apple பெறும் தகவல்களில் நீங்கள் தட்டிப் பார்வையிடும் தனிப்பயனாக்கிய உள்ளடக்கம் பற்றிய தகவல்களும் அடங்கும்.
உங்கள் Apple கணக்கில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் அம்சத்தை ஆஃப் செய்வதன் மூலம் App Store மற்றும் பிற சில சேவைகளுக்கான தனிப்பயனாக்குதல் அம்சங்களை ஆஃப் செய்யலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > மீடியா & வாங்குதல்கள் > கணக்கைக் காட்டு என்பதற்குச் சென்று பிரத்தியேகப் பரிந்துரைகளை ஆஃப் செய்ய அதைத் தட்டுங்கள். தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது, கேம்ஸ் செயலியில் உங்களுக்குப் பரிந்துரைகளைக் காட்டுவதற்காக மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை App Storeஇல் இருந்து கேம்ஸ் செயலி பயன்படுத்தாது. இருப்பினும், கேம்ஸ் செயலி லைப்ரரியின் ஒரு பகுதியாக நீங்கள் பதிவிறக்கிய கேம்ஸ் செயலிகளை நாங்கள் இப்போதும் காட்டுவோம்.
Arcade
நீங்கள் Apple Arcadeஇல் சந்தா சேர்ந்திருக்கும்போது, நீங்கள் பதிவிறக்கி விளையாடிய Arcade கேம்களும் உங்கள் சந்தாவுடன் கிடைக்கும் Apple Arcade செயலிகளும் கேம்ஸ் செயலியில் இருக்கும். நீங்கள் விரும்பக்கூடிய பிற கேம்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் உங்கள் Apple Arcade செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்.
Game Center
கேம்கள், சவால்கள், செயலிக்குள்ளான நிகழ்வுகள் மற்றும் நண்பர்களை உங்களுக்குப் பரிந்துரைக்க நீங்கள் விளையாடும் Game Center செயல்படுத்தப்பட்டுள்ள கேம்கள் உட்பட உங்கள் Game Center செயல்பாடுகள், Game Center சவால்கள், சாதனைகள், லீடர்போர்டுகள் ஆகியவற்றை உங்கள் App Store செயல்பாட்டுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன.
சாதனத்திற்குள்ளான செயலிப் பயன்பாடு
சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக, சமீபத்தில் விளையாடிய கேம்களின்படி வகைப்படுத்த நீங்கள் தொடங்கிய கேம் சார்ந்த செயலிகள் மற்றும் அவற்றை எப்போது தொடங்கினீர்கள் என்ற விவரம் போன்று உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களை நாங்கள் அணுகுவோம்.
கேம்ஸ் செயலியை மேம்படுத்துதல்
கேம்ஸ் செயலி மற்றும் தொடர்புடைய சேவைகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உகந்ததாக்குவதற்கும் செயலி, App Store, Apple Arcade, Game Center ஆகியவற்றில் உங்கள் பயன்பாடு பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். இந்தச் செயலிகள் மற்றும் சேவைகளை எப்போதில் இருந்து எப்போது வரை பயன்படுத்தினீர்கள் என்ற விவரம், நீங்கள் தேடிய, பார்த்த, பதிவிறக்கிய உள்ளடக்கம் மற்றும் கேம்கள், அறிவிப்புகள் மற்றும் பேட்ஜ்களை நீங்கள் கையாண்ட விதம், கேம் தொடர்பான செயலிகளுக்குள் நீங்கள் வாங்கியவை போன்ற தகவல்களும் இதில் அடங்கும். உங்கள் சாதனத்தின் வகை, ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, சாதனத்தில் காலியாக உள்ள சேமிப்பிடம் போன்ற உங்கள் சாதனம் தொடர்பான தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். நீங்களும் பிறரும் கேம்ஸ் செயலியின் அம்சங்களையும் தொடர்புடைய சேவைகளையும் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு இந்தச் செயலிகளையும் சேவைகளையும் மேம்படுத்தவும், கேம்ஸ் தொடர்பான புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்குவதற்கு வழிகாட்டவும் இந்தத் தகவல்களை நாங்கள் ஒன்றிணைத்துப் பயன்படுத்துகிறோம்.
உங்கள் Apple Games பயன்பாட்டுடன் தொடர்புடைய சீரற்ற தனித்துவ அடையாளத் தகவல்களுடன் உங்கள் கேம்ஸ் செயலியின் பயன்பாட்டுத் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும், மேலும் உங்கள் Apple கணக்கில் அவை சேமிக்கப்படாது. இந்த அடையாளத் தகவலை மீட்டமைக்க உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > கேம்ஸ் > “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டவும். Mac சாதனத்தில், கேம்ஸ் > அமைப்புகள் > அடையாளத் தகவலை மீட்டமை என்பதற்குச் செல்லவும்.
கேம்ஸ் செயலியில் சிறார்கள்
சிறார் அமைப்புகளும் பெற்றோர் கட்டுப்பாடுகளும் Apple Games செயலிக்கும் பொருந்தும். Game Center தனியுரிமை அமைப்புகள் மற்றும் சிறார்களுக்கான ஸ்கிரீன் டைம் உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள் கேம்ஸ் செயலியில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பொருந்தும். தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் அமைப்புகளும் பொருந்தும். உங்கள் சிறாரின் சாதனத்தில் மல்டிபிளேயர் செயல்பாடுகள், நண்பர்களைச் சேர்க்கும் திறன், ஒரே விளையாட்டை விளையாடும் நண்பர்களுடன் இணைந்து விளையாடும் திறன் ஆகியவை உட்பட விளையாட்டு தொடர்பான செயலிகளில் செலவழிக்கப்படும் நேரத்தை வரம்பிடவும், Game Center அம்சங்களைத் தடுக்கவும், உங்கள் iOS, iPadOS, visionOS அல்லது Mac சாதனத்தில், அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள் > App Store, மீடியா, இணையம் & கேம்ஸ் என்பதற்குச் சென்று, “Game Center” பிரிவிற்குச் செல்லவும். tvOSஇல், அமைப்புகள் > பொது அமைப்புகள் > கட்டுப்பாடுகள் என்பதற்குச் செல்லுங்கள்.
Game Centerஇல் பிற பிளேயர்களுடன் உரையாடும்போது, பயனர் உள்ளிடும் மெசேஜ்களைச் சிறார்களால் அனுப்பவோ பெறவோ முடியாது. முன்னமைத்த மெசேஜ்களை மட்டுமே அவர்களால் பெறவும் அனுப்பவும் முடியும். Game Center செயல்படுத்தப்பட்டுள்ள செயலிகளில் கேமிற்குள் உள்ள “குரல் உரையாடல்” அம்சமும் சிறார்களுக்கு முடக்கப்பட்டிருக்கும். இருப்பினும், Game Center செயல்படுத்தப்படாத கேம்ஸ் செயலிகளுக்கும் Game Center ஆதரிக்காத செயல்பாடுகளுக்கும் அந்தச் செயலிகளுக்கான செயலிக்குள்ளான கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் பொருந்தும்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
கேம்ஸ் செயலி, நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள், சலுகைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிவிக்க, நீங்கள் வைத்திருக்கும் Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். கேம்ஸ் செயலியில் கிடைக்கும் புதிய அம்சங்கள், உள்ளடக்கம், செயலிக்குள்ளான நிகழ்வுகள், சவால்கள், லீடர்போர்டுகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப கேம்ஸ் செயலி, App Store, Apple Arcade மற்றும் Game Centerஇல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் Apple பயன்படுத்தக்கூடும்.
மின்னஞ்சல் மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் ஒப்புதலளித்தால், இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு அனுப்பப்படலாம். account.apple.com இணையதளத்திற்குச் சென்று அல்லது உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > தனிப்பட்ட தகவல்கள் > “தகவல்தொடர்பு முன்னுரிமைகள்” என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முன்னுரிமைகளை நீங்கள் மாற்றலாம், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.
அறிவிப்புகள்
Push, பேனர் அல்லது பேட்ஜ் அறிவிப்புகள் வழியாகவும் Game Center அனுப்பும் இந்தத் தகவல்களை நீங்கள் பெறலாம். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற அல்லது அறிவிப்புகளைப் பெறுவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > Game Center என்பதற்குச் செல்லுங்கள். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகள் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக, Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Games செயலியில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:
- தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்டுதல், கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவிறக்க போதுமான இடம் உங்கள் சாதனத்தில் உள்ளதா என்பதைத் தீர்மானித்தல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் தானியங்கு முறையில் பதிவிறக்கப்படுவதற்கு வழிவகுத்தல்
- கேம்ஸ் செயலியில் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்குதல்
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் கேம்ஸ் செயலி, தொடர்புடைய பிற Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தி உகந்ததாக்குதல்
- நீங்கள் விரும்பக்கூடிய சலுகைகளை மின்னஞ்சல், Push, பேனர், பேட்ஜ் அறிவிப்புகள் மூலம் உங்களுக்கு வழங்குதல்
- டெவலப்பர்களின் செயலிகளில் பதிவிறக்கப்படுபவை மற்றும் வாங்கப்படுபவை தொடர்பான அறிக்கையை அவர்களுக்கு வழங்குதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:
- பதிவிறக்கங்கள், வாங்குதல்கள் போன்று கேம்ஸ் செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் Game Center அறிவிப்புகள், மெசேஜ்கள் மற்றும் செயலிக்குள் தோன்றும் அறிவிப்புகளும் மெசேஜ்களும்
- உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள்
- உங்கள் IP முகவரி
- சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்
தக்கவைத்தல்
கேம்ஸ் செயலி மற்றும் App Storeஇல் நீங்கள் வாங்கியவை மற்றும் பதிவிறக்கியவை உடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவுகளை, நிதி அறிக்கையிடல் தொடர்பான பொருந்தும் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குத் தக்க வைக்கிறோம், இது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும். பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் தக்கவைத்தல் காலம் தேவை. ஆனால் சீனா போன்ற சில பகுதிகளில் இந்தக் காலம் 30 வருடங்களாக இருக்கலாம். நீங்கள் வாங்கும், பதிவிறக்கும் உள்ளடக்கத்தை எங்கள் பொருந்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் பதிவிறக்க உங்களுக்கு உதவுவதற்காக உங்கள் கணக்கு இருக்கும் காலம் வரை அந்தப் பதிவை நாங்கள் தக்கவைக்கிறோம். உலாவல் செயல்பாடு, தேடல்கள் போன்ற பிற தகவல்களைக் குறுகிய காலத்திற்குத் தக்கவைக்கிறோம். தரவைத் தக்கவைப்பதற்கான பொருந்தும் சட்டரீதியான தேவைகள், குறிப்பிட்ட வணிகப் பயன்பாட்டு நோக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தக் காலஅளவு தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பின்னர் அல்லது கேம்ஸ் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திய பின்னரும்கூட வாங்குதல்கள் போன்ற சில தகவல்கள் (உங்கள் சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் இல்லை) வணிகப் பதிவுகளாகத் தக்கவைக்கப்படக்கூடும்.
நீங்கள் பேமெண்ட் கார்டைப் பயன்படுத்தும்போது எதிர்கால வாங்குதல்கள், தொடர் பரிவர்த்தனைகள் அல்லது நீங்கள் அங்கீகரிக்கும் பிற பயன்பாடுகளுக்காக Apple உங்கள் கார்டு எண்ணையும் பில்லிங் தகவல்களையும் தக்கவைத்து தானாகப் புதுப்பிக்கலாம். Apple இந்தத் தகவல்களை உங்கள் நிதி நிறுவனம் அல்லது பேமெண்ட் நெட்வொர்க்கிலிருந்து பெற்று மோசடித் தடுப்பு மற்றும் சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தலாம்.
மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
Apple Games செயலி, App Store, Apple Arcade, Game Center, பிற Apple செயலிகள் மற்றும் சேவைகள் போன்றவற்றில் மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம். இந்தத் தகவல்களில் சாதன வகை, மென்பொருள் பதிப்பு போன்ற சாதனத் தகவல்கள், இருப்பிடத் தகவல்கள் (உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை உங்கள் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் தோராயமான இருப்பிடம்), இதுவரையான பதிவிறக்கங்களும் வாங்குதல்களும், தேடல்கள், இந்தச் சேவைகளுடனான உங்களின் பிற செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.
நீங்கள் எதையேனும் வாங்கத் தொடங்கும்போது அல்லது தானாகவே புதுப்பிக்கும் வகையில் சந்தாவை அமைத்திருக்கும்போது அந்தக் கோரிக்கையைச் செயலாக்கி, பேமெண்ட் கூட்டாளரிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அந்தத் தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க Apple உடனான உங்கள் வணிகத் தொடர்புகள் பற்றிய இதுவரையான தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.
நீங்கள் வாங்க முயலும்போது உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் சாதனத்தின் நம்பகத்தன்மை மதிப்பெண்ணையும் நாங்கள் கணக்கிடுகிறோம், பயன்படுத்தும் விதம் என்பதில் ஃபோன் அழைப்புகளின் தோராயமான எண்ணிக்கை, நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்கள் தோராயமான எண்ணிக்கை அடங்கும். உங்கள் சாதனத்தில் உள்ள பின்னணி மதிப்புகளை Apple அறிந்துகொள்ளாத வகையில் இந்தக் கணக்கீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் குறிப்பிட்ட காலத்திற்கு எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
App Store உட்பட கேம்ஸ் செயலியைப் பயன்படுத்துவதற்கு உதவும் செயலிகள் மற்றும் சேவைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.apple.com/in/legal/privacy/data/en/app-store தளத்தைப் பார்வையிடுங்கள். Apple Arcade குறித்த தகவல்களுக்கு www.apple.com/in/legal/privacy/data/en/apple-arcade தளத்திற்குச் செல்லுங்கள். Game Center குறித்த தகவல்களுக்கு www.apple.com/in/legal/privacy/data/en/game-center தளத்திற்குச் செல்லுங்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12