ChatGPT நீட்டிப்பு & தனியுரிமை

அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் ChatGPT நீட்டிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


Siri, எழுதும் கருவிகள், விஷுவல் நுண்ணறிவு (கிடைக்கும்பட்சத்தில்) போன்ற ஆதரிக்கப்படும் அம்சங்களைப் பயன்படுத்தும்போது ChatGPT நீட்டிப்பைச் செயல்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரை மற்றும் பட உள்ளடக்கத்தை உருவாக்கவும் உங்களுக்கு ChatGPT நீட்டிப்பு உதவலாம். ChatGPT எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும், உங்கள் தகவல்கள் பகிரப்படுவதற்கு முன்பு உங்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா வேண்டாமா என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

கணக்கு இல்லாமலேயே நீங்கள் ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்தலாம். உங்களிடம் ChatGPT கணக்கு இருந்தால், இந்த நீட்டிப்பை உங்கள் கணக்குடன் இணைப்பதற்கும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்துதல்

ChatGPTக்கு ஏதேனும் தகவலை அனுப்புவதற்கு முன்பு நீங்கள் ChatGPT நீட்டிப்பைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். இந்த நீட்டிப்பு, இயல்பாகவே ஆஃப் செய்யப்பட்டு இருக்கும். இதைச் செயல்படுத்தினால் Siri, எழுதும் கருவிகள், விஷுவல் நுண்ணறிவு போன்ற பல ஆதரிக்கப்படும் அம்சங்களில் நீங்கள் ChatGPTக்குக் கோரிக்கைகளை அனுப்ப முடியும். iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > Apple Intelligence & Siri > ChatGPT, என்பதற்குச் சென்று “ChatGPTஐப் பயன்படுத்து” என்பதை ஆஃப் செய்வதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ChatGPT நீட்டிப்பை முடக்கலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > Apple Intelligence & Siri > ChatGPT என்பதற்குச் சென்று “ChatGPTஐப் பயன்படுத்து” என்பதை ஆஃப் செய்யவும்.

ChatGPT நீட்டிப்பை அணுக Siriஐ நீங்கள் பயன்படுத்தும்போது, ஒரு கோரிக்கையைச் செயலாக்கும்படி நீங்கள் ChatGPTஇடம் வெளிப்படையாகக் கேட்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உங்கள் கோரிக்கை பகுப்பாய்வு செய்யப்படும். உதாரணத்திற்கு, “Ask ChatGPT to write a poem” என்று சொல்வது அல்லது டைப்செய்வது போன்று ஒரு பணியை மேற்கொள்ளும்படி நீங்கள் ChatGPTஇடம் வெளிப்படையாகக் கேட்டால், அந்தக் கோரிக்கைகள் நேரடியாக ChatGPTக்கு அனுப்பப்படும்.

ChatGPTஐப் பயன்படுத்த வெளிப்படையான கோரிக்கை எதுவும் இல்லை எனில், ChatGPTஇடம் பயனுள்ள முடிவுகள் இருக்குமா என்பதைத் தீர்மானிக்க உங்கள் கோரிக்கை பகுப்பாய்வு செய்யப்படும். அப்படி இருந்தால், ChatGPTஐப் பயன்படுத்த விரும்புகிறீர்களா என்று Siri உங்களிடம் கேட்கும். நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் பதிலை ChatGPTக்கு Siri அனுப்பி, பதிலை நேரடியாக வழங்கும். ChatGPTக்கு Siri ஒரு கோரிக்கையை அனுப்ப வேண்டுமா இல்லையா என்பதை Siri உங்களிடம் கேட்டு உறுதிசெய்வதை முடக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். அதற்கு அமைப்புகள் > Apple Intelligence & Siri > ChatGPT, என்பதற்குச் சென்று “ChatGPT கோரிக்கைகளை உறுதிசெய்தல்” என்பதைத் தட்டவும்.

எழுதும் கருவிகள், விஷுவல் நுண்ணறிவு போன்ற ஆதரிக்கப்படும் அம்சங்களை நீங்கள் பயன்படுத்தும்போது, இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் தேர்வுசெய்ய முடியும்.

ChatGPTக்கு வழங்கப்பட்ட தரவு

ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்தும்போது, ChatGPTக்கு என்ன உள்ளடக்கத்தை அனுப்புவது என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் கோரிக்கை மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், ஆவணத்தின் உள்ளடக்கங்கள் போன்ற இணைப்புகள், கோரிக்கையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில தரவுகள் (உதாரணமாக, தற்போதைய நேர மண்டலம், நாடு, சாதன வகை, மொழி, கோரிக்கை அனுப்பும்போது பயன்படுத்தப்பட்ட அம்சம்) போன்றவை உங்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்கவும், துல்லியமான மற்றும் பொருத்தமான முடிவுகளை வழங்க ChatGPTஐச் செயல்படுத்தவும் ChatGPTக்கு அனுப்பப்படும்.

ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்தும்போது, உங்கள் IP முகவரி ChatGPTக்குக் காட்டப்படாது. உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியைப் புவியியல் வட்டாரத்துடன் பொருத்துவதன் மூலம் தோராயமாகக் கணிக்கப்படும் உங்களின் பொதுவான இருப்பிடம், மோசடியைத் தடுப்பதற்காகவும் பொருந்தக்கூடிய சட்டத்துடன் இணங்குவதற்காகவும் ChatGPTஐச் செயல்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக ChatGPTக்கு வழங்கப்படும்.

கணக்கு இல்லாமல் ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்துதல்

கணக்கு இல்லாமல் ChatGPT நீட்டிப்பை நீங்கள் அணுகினால் மேலே விவரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே ChatGPTக்கு அனுப்பப்படும். உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எந்தத் தகவலையும் OpenAI பெறாது.

உங்கள் கோரிக்கையைப் பூர்த்திசெய்யும் நோக்கத்திற்காக மட்டுமே OpenAI உங்கள் தகவல்களைச் செயலாக்க வேண்டும். உங்கள் தகவல் அல்லது அது வழங்கக்கூடிய ஏதேனும் ஒரு பதில் சேமிக்கப்படக்கூடாது. பொருந்தக்கூடிய சட்டத்தின் தேவைக்கு ஏற்ப மட்டுமே தகவல் சேமிக்கப்படக்கூடும். அத்துடன், OpenAI அதன் மாடல்களை மேம்படுத்தவோ பயிற்றுவிக்கவோ உங்கள் தகவல்களைப் பயன்படுத்தாது.

ChatGPT கணக்குடன் ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்துதல்

ChatGPT கணக்கை உருவாக்கவோ ஏற்கெனவே உள்ள கணக்கில் உள்நுழையவோ நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் ChatGPT சந்தாதாரராக இருந்தால், உங்கள் Apple அனுபவங்களில் உள்ள கட்டண அம்சங்களுக்கான அணுகல் உங்களுக்கு இருக்கும்.

நீங்கள் உள்நுழைந்துள்ளபோது, உங்கள் ChatGPT கணக்கு அமைப்புகள் மற்றும் OpenAIஇன் தரவுகளுக்கான தனியுரிமைக் கொள்கைகள் பொருந்தும். அதாவது, உங்கள் கோரிக்கை, இணைப்புகள், அமர்வு வரலாறு ஆகியவற்றைப் பதிவுசெய்து அவற்றின் மாடல்களைப் பயிற்றுவிக்கவோ மேம்படுத்தவோ OpenAI இந்தத் தரவுகளைப் பயன்படுத்தக்கூடும். OpenAIஇன் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, https://openai.com/policies/row-privacy-policy தளத்திற்குச் செல்லவும்.

Appleக்கு வழங்கப்பட்ட தரவு

ஆதரிக்கப்படும் அம்சங்களில் நீங்கள் ChatGPTஐப் பயன்படுத்தும்போது, சேவையை வழங்கவும், மோசடியிலிருந்து பாதுகாக்கவும் ChatGPTக்கான உங்களுடைய கோரிக்கைகள், ChatGPTஇன் பதில் ஆகியவற்றைப் பற்றிய (அனுப்பப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அல்லது கோரிக்கை/பதிலின் தோராயமான அளவு போன்றவை) குறிப்பிட்ட தகவல்களை Apple சேகரிக்கும்.

Siriஇல் ChatGPTஐப் பயன்படுத்தும்போது உங்கள் கோரிக்கை பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/ask-siri-dictation இணையதளத்தைப் பார்வையிடவும். “Siri மற்றும் டிக்டேஷன் அம்சத்தை மேம்படுத்துதல்” என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் கோரிக்கை தொடர்பான கூடுதல் தரவுகளை Apple பதிவுசெய்யக்கூடும். இதில் உங்கள் கோரிக்கையின் ஆடியோ பதிவு மற்றும் டிரான்ஸ்கிரிப்ட், பதிலுடன் தொடர்புடைய மெட்டாடேட்டா போன்றவை அடங்கும். இந்தத் தரவுகள் எதுவுமே உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/improve-siri-dictation இணையதளத்தைப் பார்வையிடவும்.

உங்களின் தற்போதைய ChatGPT திட்டத்தை நீங்கள் Apple சாதனம் மூலம் மேம்படுத்த முயன்றால், திட்டத்தை மேம்படுத்துவதிலான உங்கள் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான உங்களின் செயல்பாடுகள் குறித்த சில தகவல்களை (பார்வைகள், கிளிக்குகள் போன்றவை) Apple சேகரிக்கக்கூடும். இந்தத் தரவுகள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.

சிக்கலைப் புகாரளித்தல்

ChatGPT நீட்டிப்பைப் பற்றிய ஏதேனும் சிக்கலைப் புகாரளிக்க வேண்டுமெனில், “சிக்கலைப் புகாரளி” அம்சம் மூலம் அதைப் புகாரளிக்கலாம். புகாரளிக்கும்போது, புகாரைப் பற்றிய தகவல்களை OpenAI உடன் பகிர்வதற்கு நீங்கள் தனியாகத் தேர்வுசெய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, www.apple.com/legal/privacy/data/en/report-concern இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

2025-12-12