Face ID & தனியுரிமை

Face ID உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


TrueDepth கேமராவைப் பயன்படுத்தி Face ID உங்களை அங்கீகரிக்கிறது

iPhone அல்லது iPadஐ அன்லாக் செய்ய Face IDஐப் பயன்படுத்தலாம். iPhone அல்லது iPadஐப் பார்க்கும் நபர் பதிவுசெய்யப்பட்ட பயனரா என்பதை TrueDepth கேமராவைப் பயன்படுத்தி Face ID தீர்மானிக்கிறது. Apple Pay மூலம் பணம்செலுத்துதல், App Storeஇல் செயலிகளை வாங்குதல், செயலிகளுக்குள் அங்கீகரித்தல் போன்றவற்றுக்கும் Face IDஐப் பயன்படுத்தலாம்.

Face ID தரவு (உங்கள் முகத்தின் கணித உருவகிப்புகள் உட்பட) என்கிரிப்ட் செய்யப்பட்டு, அதன் கீ உங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் Secure Enclaveக்குள் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, நீங்கள் Face ID ஐப் பயன்படுத்தும்போது (நீங்கள் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்படும்போது) இந்தத் தரவு செம்மைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும். நெருக்கமான பொருத்தம் கண்டறியப்பட்டு அதைத் தொடர்ந்து சாதனத்தை அன்லாக் செய்ய பாஸ்கோடு உள்ளிடப்படும்போதும் Face ID இந்தத் தரவைப் புதுப்பிக்கும்.

Face ID தரவு உங்கள் சாதனத்தை விட்டு வெளியே செல்லாது, iCloudஇல் அல்லது வேறு இடத்தில் ஒருபோதும் பேக்-அப் செய்யப்படாது.

Face ID உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்

நீங்கள் Face IDஇல் பதிவுசெய்வதைத் தேர்வுசெய்தால், அது பயன்படுத்தப்படும் விதத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் அதை முடக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் iPhone அல்லது iPadஐ அன்லாக் செய்ய Face IDஐப் பயன்படுத்த விரும்பவில்லையெனில், அமைப்புகள் > Face ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு, iPhone அன்லாக் அல்லது iPad அன்லாக் என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யலாம். Face IDஐ முடக்க, அமைப்புகள் > Face ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று, உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு “Face IDஐ மீட்டமை” என்பதைத் தட்டுங்கள். இதைச் செய்தால் உங்கள் முகத்தின் கணித உருவகிப்புகள் உள்ளிட்ட Face ID தரவு உங்கள் சாதனத்தில் இருந்து நீக்கப்படும். “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி உங்கள் சாதனத் தரவை அழிக்க அல்லது மீட்டமைக்கத் தேர்வுசெய்தாலோ அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் அமைப்புகளையும் நீக்கினாலோ அனைத்து Face ID தரவும் நீக்கப்படும்.

Face ID மற்றும் செயலிகள்

ஆதரிக்கப்படும் செயலிகளுக்குள், அங்கீகரித்தலுக்காக நீங்கள் Face IDஐச் செயல்படுத்தலாம். அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற தகவல் மட்டுமே செயலிகளுக்குத் தெரிவிக்கப்படும். பதிவுசெய்யப்பட்ட முகத்துடன் தொடர்புடைய Face ID தரவுகளைச் செயலிகளால் அணுக முடியாது.

TrueDepth கேமராவின் பிற பயன்பாடுகள்

நீங்கள் Face IDக்குப் பதிவுசெய்யாவிட்டாலும் கூட, உங்கள் iPhone அல்லது iPadஐப் பார்க்காதபோது டிஸ்ப்ளேவை மங்கச் செய்தல் அல்லது உங்கள் சாதனத்தைப் பார்க்கும்போது விழிப்பூட்டல்களின் ஒலியளவைக் குறைத்தல் போன்ற கவன ஈர்ப்பு அறிதல் அம்சங்களை ஆதரிப்பதற்காக TrueDepth கேமரா நுண்ணறிவுடன் செயல்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் Safariஐப் பயன்படுத்தும்போது, உங்கள் சாதனத்தைப் பார்க்கிறீர்களா என்பதை உங்கள் சாதனம் உறுதிசெய்யும், சாதனத்தைப் பார்க்கவில்லை எனில் திரையை ஆஃப் செய்யும்.

நீங்கள் இந்த அம்சங்களைப் பயன்படுத்த விரும்பவில்லையெனில், அமைப்புகள் > Face ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு “கவன ஈர்ப்பு அறிதல் அம்சங்கள்” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யலாம்.

2025-12-12