உடல்நலம் & செயல்பாடு மேம்படுத்துதல் & தனியுரிமை

உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


உடல்நலம், செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி அம்சங்களின் செயல்திறனை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், புரிந்துகொள்வதற்கும் உங்கள் iPhone, iPad, Apple Vision Pro, AirPods, Apple Watch ஆகியவற்றிலிருந்து செயல்பாடு, உடற்பயிற்சி மற்றும் உடல்நலம் தொடர்பான தகவல்களை உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் அம்சம் Appleக்கு அனுப்பும். இதில் உடல்நலம் மற்றும் செயல்பாடு தொடர்பான சென்சார்களிடமிருந்து பெறப்படும் நேரடி மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளும் அடங்கும் (Apple Watchஇல் உள்ள ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி (PPG) சென்சாரில் இருந்து வரும் தரவுகள் போன்றவை). உங்கள் தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது, மேலும் இதில் தனிப்பட்ட தரவுகளும் சேர்க்கப்படாது.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

நீங்கள் உடல்நலம் செயலியில் உள்ளிட்ட சில தரவுகள் (வயது, பாலினம், உயரம், எடை, சக்கர நாற்காலிப் பயன்முறை நிலை போன்றவை), உங்கள் Apple Watch, iPhone, iPad, Apple Vision Pro ஆகியவற்றில் உள்ள உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் செயலிகளில் காட்டப்படும் தரவுகள், AirPods மூலம் பயன்படுத்தப்படும் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தொடர்பான செயலிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில தரவுகள் ஆகியவற்றை உடல்நலம் & செயல்பாடுகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக Apple சேகரிக்கக்கூடும். உதாரணமாக, பகிரப்பட்ட தகவல்களில் பின்வரும் விவரங்கள் இருக்கலாம்:

இதய அரோக்கியம்

  • எடுக்கப்பட்ட ECG பதிவுகளின் எண்ணிக்கை, முடிவுகள், தொடர்புடைய அறிகுறிகள் போன்ற ECG செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம்
  • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அறிவிப்புகள், நிகழ்வு எண்ணிக்கை மற்றும் வகை, இதயத்துடிப்பு அளவீடுகளின் எண்ணிக்கை மற்றும் வகை, சில ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் மதிப்புகளின் சதவீதம், பல்வேறு தரவு வகைகள் மற்றும் தொடர்புடைய வாழ்க்கைக் காரணிகளுடனான உங்கள் செயல்பாடுகள், முடிவு எடுக்கப்படாத அளவீடுகளின் எண்ணிக்கை மற்றும் சாத்தியமான காரணங்கள் போன்ற இதயத்துடிப்புத் தகவல்கள்
  • இதயம் சார்ந்த அளவீடுகள் மற்றும் காட்சிப்படுத்துதல்
  • “இரத்த அழுத்தப் பதிவுகள்” அம்சத்தின் உங்கள் பயன்பாடு. (எ.கா., குறிப்பிட்ட ஓர் இரத்த அழுத்த அளவீட்டை உள்ளிட்டுள்ளீர்களா இல்லையா, நீங்கள் பதிவுசெய்துள்ள அளவீடுகளுக்கு இடைபட்ட காலம், பதிவுசெய்யப்பட்டுள்ள இரத்த அழுத்த அளவீடுகளின் மொத்த எண்ணிக்கை, நீங்கள் பதிவுசெய்துள்ள இரத்த அழுத்த அளவீடுகளும் “இரத்தக்கொதிப்பு அறிவிப்பு” அம்சத்தின் பயன்பாடும் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த தொடர்புடைய தகவல்கள் போன்றவை)
  • “இரத்தக்கொதிப்பு அறிவிப்பு” அம்சத்தின் உங்கள் பயன்பாடு. (எ.கா., பெறப்பட்ட இரத்தக்கொதிப்பு அறிவிப்புகளின் எண்ணிக்கை, பெறப்படும் இரத்தக்கொதிப்பு அறிவிப்புகளுக்கு இடைபட்ட காலம் போன்றவை)

இரத்த ஆக்சிஜன்

  • இரத்த ஆக்சிஜன் செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம், எடுத்துக்காட்டாக அளவீடுகளின் முடிவுகள், எடுக்கப்பட்ட அளவீடுகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட அளவீடுகளின் தரம் போன்றவை

மனநலம்

  • மனநல ஆரோக்கியம் அம்சங்களின் உங்கள் உபயோகம். அதாவது அம்சங்களில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள், மருத்துவப் பரிசோதனையை நிறைவுசெய்தீர்களா மற்றும் அதை எப்போது நிறைவுசெய்தீர்கள் என்ற விவரம், உங்கள் மனநிலையைப் பதிவுசெய்ததன் நேர இடைவெளி, செயல்படுத்தப்பட்டுள்ள அறிவிப்புகளின் நேர இடைவெளி மற்றும் வகை, அறிவிப்புகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் போன்றவை
  • மைண்ட்ஃபுல்னஸ் செயலியை நீங்கள் பயன்படுத்தும் விதம். அதாவது, மைண்ட்ஃபுல்னஸ் அமர்வு வகை, இதயத்துடிப்பு கணக்கிடப்பட்டதா என்ற விவரம், உங்கள் சராசரி சுவாச வீதம், அமர்வின் நீளம், குறிப்பிட்ட அமர்வின் பிழைத் தரவுகள் உட்பட உங்கள் சுவாச அமர்வைப் பின்தொடர்ந்து மைண்ட்ஃபுல்னஸ் செயலில் இருந்து பெறப்பட்ட சுவாச அளவீடுகளின் தரவுகள் ஆகியவை

சுழற்சிக் கண்காணிப்பு

  • கருத்தடைகளின் பயன்பாடு உட்பட மாதவிடாய்ச் சுழற்சிகள், கர்ப்பம், சுழற்சிக் காரணிகள் ஆகியவற்றின் அறிகுறிகள் மற்றும் முடிவுகள், நீடித்த மாதவிடாய், ஒழுங்கற்ற அல்லது அரிதாக ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சிகளின் கண்டறிதல், தொடர்ச்சியான இரத்தப்படுதல், ஓவுலேஷன் கணிப்புகள், மாதவிடாய் மற்றும் கருவுற ஏற்ற காலத்தைக் கண்டறிதல், வீட்டில் மேற்கொண்ட ஓவுலேஷன் சோதனை முடிவுகள்
  • உங்கள் தற்போதைய கர்ப்ப நிலை உட்பட கர்ப்பகால அம்சத்தின் உங்கள் உபயோகம் மற்றும் அதில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் தொடர்பான தகவல்கள், உங்கள் கர்ப்பம் தொடர்பான சில கணக்கிடப்பட்ட தேதிகள் (நீங்கள் கர்ப்பகாலத் தேதியை அமைத்தீர்களா என்பது போன்றவை), உங்கள் கர்ப்பத்தின் கால அளவு மற்றும் உங்கள் மருத்துவ ஐடியில் உங்கள் கர்ப்பத்தை நீங்கள் சேர்த்துள்ளீர்களா என்ற விவரம்)

மருந்துகள்

  • “மருந்துகள்” அம்சத்தின் உங்கள் உபயோகம். ஒரு மருந்தைப் பதிவுசெய்தீர்களா என்ற விவரம், மருந்தைப் பதிவுசெய்யப் பயன்படுத்திய முறை, மருந்து அட்டவணையை உருவாக்குதல், மருந்து அட்டவணையின் வகை, மருந்து அட்டவணைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மருந்து அமைப்புகள் மற்றும் அறிவிப்புகளின் உபயோகம் மற்றும் அவற்றில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும்

உறக்கம்

  • Apple Watchஇல் “உறக்கம்” செயலி மற்றும் “உடல்நலம்” செயலியில் உறக்கம் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம். அதாவது உறக்கத்தின்போதான சுவாச வீதத்தின் மதிப்புகள், உறக்கத்திற்கான திட்ட அட்டவணைகள் மற்றும் அவை ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட உறக்க நேரத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்ற தகவல், உறக்கத்தில் இருந்த நேரத்தைக் கணிக்க மற்றும் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் இயக்கத் தரவு மற்றும் பிற சாதனங்களின் பயன்பாட்டுத் தரவு, உறக்க நிலைகள் தொடர்பான தகவல்கள், நீங்கள் பெற்ற மதிப்பெண், உறக்கத்தின்போது நீங்கள் விழித்தெழுந்த நிகழ்வுகளின் எண்ணிக்கை போன்று உறக்க மதிப்பெண்ணை நீங்கள் பயன்படுத்தும் விதம் தொடர்பான தகவல்கள்
  • “உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் குறித்த அறிவிப்புகள்” அம்சத்தின் உங்கள் பயன்பாடு மற்றும் அதில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள். அதாவது உங்கள் சுவாசக் கோளாறுகளின் மதிப்புகள், நீங்கள் உறங்கத் தொடங்கிய நேரம் மற்றும் நேரஅளவு, உங்கள் சுவாசத் தொந்தரவுகளின் கால இடைவெளி, உறக்க அமர்வின்போது நீண்ட நேரமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறுகள் ஆகியவை

செவித்திறன் ஆரோக்கியம்

  • செவித்திறன் ஆரோக்கியம் தொடர்பான ஆடியோ தரவு. ஹெட்ஃபோன் ஆடியோ, சுற்றுச்சூழல் ஒலியின் நிலைகள், சுற்றுப்புற ஒலி குறைப்பு குறித்த தகவல்கள் போன்றவை
  • AirPods Proஇல் உள்ள செவித்திறன் உதவி அம்சங்கள், செவித்திறனுக்கான பரிசோதனை தொடர்பான தகவல்கள். அதாவது, நீங்கள் செவித்திறன் பரிசோதனையை நிறைவுசெய்துள்ளீர்களா என்ற விவரம், செவித்திறனைப் பரிசோதனையின் கால அளவு, செவித்திறன் பரிசோதனையை எப்போது மேற்கொண்டீர்கள், நிறைவுசெய்யப்பட்ட ஆடியோகிராம்களின் எண்ணிக்கை, அதன் வகைப்படுத்தல்கள், உங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்கள் போன்றவை

செயல்பாடு மற்றும் நகர்வு

  • செயல்பாடு மற்றும் நகர்வு குறித்த தரவுகள். அதாவது நிற்றல் நேரங்கள், உடற்பயிற்சி செய்த நிமிடங்கள், ஏறிய படிக்கட்டுகள், உயரம் மற்றும் ஆழம், நகர்வு வளையத்தை நிறைவுசெய்த சதவீதம், உடல் செயல்பாட்டு நிலை, உடற்பயிற்சித் தரவுகள் (வகை, பயன்முறை, மூலம், நேரஅளவு, உடற்பயிற்சிக்கு நீங்கள் ஆடியோவைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்ற விவரம், நீங்கள் பகிரும் உடற்பயிற்சிகள் தொடர்பான தரவுகள், செயல்பாட்டுப் பகிர்வில் நண்பர்களின் செயல்பாடு குறித்த அறிவிப்புகளுடனான உங்கள் தொடர்புமுறை தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் போன்றவை), நகர்வுநிலை தொடர்பான தகவல்கள், ஆக்சலரோமீட்டர், கைரோஸ்கோப், நீங்கள் எந்தத் திசையை நோக்கி இருக்கிறீர்கள் என்ற விவரம், அழுத்தத் தரவுகள் ஆகியவை
  • Apple Fitness+ அம்சத்தின் உங்கள் உபயோகம் மற்றும் உடற்பயிற்சிகள் தொடர்பான தகவல்கள்

உடல்நலத் தகவலைப் பகிர்தல்

  • உங்கள் உடல்நலத் தரவுகளைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர உதவும் உடல்நலப் பகிர்வு அம்சத்தின் உங்கள் உபயோகம். பகிரப்படும் உறவுகளின் எண்ணிக்கை, பகிரப்படும் உடல்நலத் தலைப்புகளின் எண்ணிக்கை, பகிரப்படும் உடல்நலத் தலைப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட உடல்நல நிலவரங்கள் தொடர்பான தகவல்கள், உடல்நலப் பகிர்வு அறிவிப்புகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
  • “உங்கள் மருத்துவருடன் பகிருங்கள்” அம்சத்தின் உங்கள் உபயோகம் (பயன்படுத்தும் நேர இடைவெளி); பகிரப்பட்ட உடல்நலத் தலைப்புகளின் குறைந்தபட்ச, அதிகபட்ச மற்றும் சராசரி எண்ணிக்கை; உடல்நலத் தரவுகளை நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உடல்நலப் பராமரிப்பு வழங்குநர்களின் எண்ணிக்கை வரம்பு போன்றவை

மருத்துவ ஐடி மற்றும் பாதுகாப்பு

  • மருத்துவ ஐடியின் உங்கள் உபயோகம். நிரப்பப்பட்ட புலங்கள், அம்சத்தில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் போன்றவை
  • Apple Watchஇல் உள்ள “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சத்தின் உங்கள் உபயோகம். கீழே விழுந்த எண்ணிக்கை, பிற விழுதல் & தாக்கம் தொடர்பான தகவல்கள் போன்றவை

Siri மற்றும் “உடல்நலம்” செயலி

  • “உடல்நலம்” செயலித் தரவுகளை அணுகுவதற்கான உங்கள் Siri உபயோகம். நீங்கள் வினவிய “உடல்நலம்” செயலித் தரவின் வகை மற்றும் கோரிக்கைத் தாராவின் வகை (உதாரணமாக, தகவல்களைப் பதிவுசெய்யச் சொன்னீர்களா அல்லது “உடல்நலம்” செயலியில் இருந்து தகவல்களை மட்டும் கோரினீர்களா)

மற்றவை

  • மணிக்கட்டு வெப்பநிலை அளவீடுகள். ஒருங்கிணைக்கப்பட்ட வெப்பநிலை அளவீடுகள், மணிக்கட்டில் அளவிடப்பட்ட வெப்பநிலைத் தரவுகளில் இருந்து கணக்கிடப்பட்ட பிற வெப்பநிலை அடிப்படையிலான தகவல்கள் போன்றவை
  • மணிக்கட்டின் நிலை மற்றும் திசையமைவு
  • கண்பார்வை குறித்த பரிந்துரைச் சீட்டு மற்றும் தொடர்புடைய விவரங்கள்
  • உடல்நலம் செயலியில் குறிப்பிட்ட சரிபார்க்கக்கூடிய உடல்நலப் பதிவுகளின் தரவுகளை எப்போது, எப்படி இம்போர்ட் செய்கிறீர்கள் என்பது தொடர்பான தகவல்கள், அத்துடன் உடல்நலம் செயலியில் காட்டப்படும் தொடர்புடைய தரவுகள் (அதிகபட்ச VO₂ போன்றவை)
  • Apple Watchஇல் உள்ள “உயிர்க்கூறு அளவீடுகள்” செயலி மற்றும் உடல்நலம் செயலியில் உள்ள உயிர்க்கூறு அளவீடுகளின் உங்கள் உபயோகம் மற்றும் அவற்றில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் தொடர்பான தகவல்கள். அதாவது, வழக்கமான வரம்பிற்கு வெளியேயான உடல்நல அளவீடுகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட அறிவிப்புகளின் எண்ணிக்கை மற்றும் உயிர்க்கூறு அளவீடுகளை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும் சில உடல்நல அம்சங்கள் குறித்த தகவல்கள் போன்றவை
  • பகல்வெளிச்சம் அம்சத்தில் செலவிடும் நேரம் தொடர்பான தகவல்கள். நீங்கள் பகலில் செலவிடும் மதிப்பிடப்பட்ட நேரம் மற்றும் தற்போதுள்ள சுற்றுப்புற ஒளி மதிப்புகளின் மொத்தப் புள்ளிவிவரங்கள் போன்றவை

பிற மூன்றாம் தரப்பு ஃபிட்னஸ் செயலிகள் அல்லது சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளனவா, பயன்படுத்தப்பட்டுள்ளனவா, இணைக்கப்பட்டுள்ளனவா என்ற தகவல், மூன்றாம் தரப்புச் செயலிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட Apple உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் அம்சங்கள் அல்லது அல்காரிதங்களில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் (உதாரணமாக HealthKit APIகள்), உங்கள் தோராயமான இருப்பிடம், உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் செயலியில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள், Apple Watchஐ எவ்வளவு நாட்களாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவல், செயல்பாடு மற்றும் உடல்நலம் தொடர்பான செயலிகள், அறிவிப்புகள், அமைப்புகள், அம்சங்கள் ஆகியவற்றை நீங்கள் செயல்படுத்தியுள்ளீர்களா என்ற விவரம் மற்றும் அவற்றில் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் அவற்றை நீங்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவை இதில் அடங்கும்

மேலே உள்ள தரவுகள் அனைத்தும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காண முடியாத முறையில் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது ஒன்றிணைக்கப்படலாம். மேலும் Appleக்கு அனுப்பப்படுவதற்கு முன் உங்கள் iPhone, iPad, Apple Vision Pro, AirPods, Apple Watch ஆகியவற்றில் பகுப்பாய்வு செய்யப்படலாம்.

உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் தரவைப் பயன்படுத்துதல் மற்றும் வெளியிடுதல்

உடல்நலம், செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி அம்சங்களின் செயல்திறனை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், புரிந்துகொள்வதற்கும் உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட தரவுகளை Apple பயன்படுத்தலாம். சில செயல்பாடுகள் மற்றும் உடல்நலம் தொடர்பான அம்சங்களுக்கான போக்குகளைக் கண்டறியவும் அளவீடுகளை மதிப்பிடவும் உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் தரவுகளை Apple பயன்படுத்தலாம். உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட உடல்நலத் தரவுகள், “உடல்நலம்” செயலியில் அம்சங்களை வழங்கும் மாடல்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, உடல்நலம் செயலியின் தேடல் மாடல்களை மேம்படுத்த, ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நலம் செயலியின் தேடல் வினவல்கள் பயன்படுத்தப்படலாம். உங்கள் தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது, மேலும் இதில் தனிப்பட்ட தரவுகளும் சேர்க்கப்படாது.

குறிப்பிட்ட சூழல்களில், ஒழுங்குமுறைச் சமர்ப்பிப்புகளை ஆதரிக்கத் தேவையான உடல்நலம் மற்றும் மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் சில ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளை Apple பகிரக்கூடும். பகிரப்பட்ட தரவுகளில் தனிப்பட்ட அல்லது உங்களை அடையாளம் காணப் பயன்படும் தரவுகள் எதுவும் இருக்காது.

“உடல்நலம் & செயல்பாட்டை மேம்படுத்துதல்” அம்சத்தை இயக்குவதன் மூலம் Apple, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களை மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது, பயன்படுத்துவது மற்றும் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். இந்தத் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple சேமிக்கக்கூடும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12