இருப்பிடச் சேவைகள் & தனியுரிமை

இருப்பிடச் சேவைகள் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இருப்பிடம் சார்ந்த பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதற்கு உங்கள் iPhone அல்லது Apple Watchஇன் தற்போதைய இருப்பிடத்தின் அடிப்படையிலான தகவல்களை Apple, மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் போன்றவை சேகரிக்கவும் பயன்படுத்தவும் இருப்பிடச் சேவைகள் அனுமதிக்கிறது. உதாரணமாக, அருகில் உள்ள காஃபிஷாப்கள், தியேட்டர்கள் போன்றவற்றைக் கண்டறிய உங்கள் இருப்பிடத் தரவு மற்றும் இருப்பிடத் தேடல் வினவலை ஒரு செயலி பயன்படுத்துவது, உங்களின் தற்போதைய இருப்பிடத்தின் அடிப்படையில் உங்கள் சாதனம் தானாகவே அதன் நேரமண்டலத்தை அமைப்பது போன்றவை.

இதுபோன்ற அம்சங்களைப் பயன்படுத்த, உங்கள் iPhoneஇல் இருப்பிடச் சேவைகள் அம்சத்தைச் செயல்படுத்தி, ஒவ்வொரு செயலியும் இருப்பிடச் சேவைகளில் இருந்து இருப்பிடத் தரவைப் பெறுவதற்கு முன்பு அந்தச் செயலிகள் அல்லது இணையதளங்கள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அனுமதி வழங்க வேண்டும். செயலிகள் உங்கள் இருப்பிடத் தரவின் (செயலி அல்லது தோராயமான இருப்பிடத்தைப் பயன்படுத்தும்போது மட்டும்) வரம்பிடப்பட்ட அணுகலை அல்லது முழு அணுகலை (செயலி அல்லது துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்தாதபோதும்) கோரலாம்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தினாலும் செயல்படுத்தாவிட்டாலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவசரகால அழைப்பை மேற்கொள்ள உங்கள் iPhoneஇன் இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்படலாம்.

இருப்பிடச் சேவைகள் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைத் தீர்மானிக்க சாதன சென்சார்கள், GPS, Bluetooth (இருக்கும்பட்சத்தில்) உள்ளிட்டவற்றுடன் கிரவுடு சோர்ஸ் செய்யப்பட்ட Wi‑Fi ஹாட்ஸ்பாட் மற்றும் மொபைல் டவர் இருப்பிடங்களைப் பயன்படுத்துகிறது.

அருகில் இருந்தால் உங்கள் இணைக்கப்பட்ட iPhoneஇன் இருப்பிடத்தை உங்கள் Apple Watch பயன்படுத்தும்.

இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தினால், பின்வருபவை போன்ற இருப்பிடம் சார்ந்த சிஸ்டம் சேவைகளும் செயல்படுத்தப்படும்:

  • ரௌட்டிங் & டிராஃபிக்: நீங்கள் பயணத்தில் இருக்கும்போது (நடந்து செல்லும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது), GPS தரவு, பயண வேகம் மற்றும் திசை, பாரோமெட்ரிக் அழுத்தத் தகவல் போன்றவற்றை அடையாளம் இல்லாமலும், என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் Appleக்கு உங்கள் iPhone அனுப்பும். அவை கிரவுடு சோர்ஸ் செய்யப்பட்ட போக்குவரத்து, சாலைவழி, நடைபாதை, வளிமண்டலத் திருத்துவதற்கான டேட்டாபேஸை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், உங்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்து (வணிகம், பூங்கா போன்ற இடங்கள்) ஒரு செயலியை நீங்கள் திறக்கும்போது இருப்பிடத் தரவை அடையாளம் நீக்கி, என்கிரிப்ட் செய்து உங்கள் iPhone அதை Appleக்கு அனுப்பும். அந்த இடம் தற்போது திறந்துள்ளதா, இப்போது எவ்வளவு பிஸியாக உள்ளது போன்ற தகவல்களைப் பயனர்கள் தெரிந்துகொள்ள Apple அவற்றைச் சேகரித்துப் பயன்படுத்தும்.
  • முக்கியமான இடங்கள் & வழிகள்: உங்களுக்கு முக்கியமான இடங்களையும் வழிகளையும் தெரிந்துகொள்ள, நீங்கள் சமீபத்தில் சென்ற இடங்கள், எத்தனை முறை, எப்பொழுது அங்கு சென்றீர்கள், எந்த வழியாகச் சென்றீர்கள் போன்ற விவரங்களை உங்கள் iPhone மற்றும் உங்கள் Apple கணக்கு மூலம் iCloudஇல் உள்நுழைந்துள்ள பிற சாதனங்கள் சேமித்து வைக்கும். உங்கள் முக்கியமான இடங்கள் & வழிகள் முழுமையான என்கிரிப்ஷன் மூலம் உங்கள் சாதனங்களுக்கு இடையே ஒத்திசைக்கப்பட்டுள்ளதால், இதை Apple படிக்க முடியாது. ஃபோட்டோஸில் சிறப்பான நினைவுகளை உருவாக்கவும், கணிக்கப்பட்ட வழிப் பரிந்துரைகளை வழங்குதல் போன்ற அம்சங்களுக்கு உதவுவதற்கு, “சென்ற இடங்கள்” மற்றும் “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட சேருமிடங்கள்” (கிடைக்கும் பட்சத்தில்) ஆகியவற்றைப் பகிர்வதைச் செயல்படுத்துவதற்கும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
  • இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்துதல்: உங்கள் iPhone குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அருகில் உள்ள Wi‑Fi ஹாட்ஸ்பாட்கள் மற்றும் மொபைல் டவர்களின் (சாதனத்தால் ஆதரிக்கப்படும் பட்சத்தில்) புவியிடம் குறிக்கப்பட்ட இருப்பிடத் தரவுகளை அடையாளம் இல்லாமலும், என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்திலும் Appleக்கு அனுப்பும். இருப்பிடச் சேவைகளை வழங்கவும் மேம்படுத்தவும் Wi‑Fi ஹாட்ஸ்பாட் மற்றும் மொபைல் டவர் இருப்பிடங்களின் இந்த கிரவுடு சோர்ஸ் செய்யப்பட்ட டேட்டாபேஸை உருவாக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
  • பரிந்துரைகள் & தேடல்: மிகவும் தொடர்புடைய பரிந்துரைகளை வழங்க உங்கள் iPhoneஇன் இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படும். இருப்பிடம் சார்ந்த பரிந்துரைகளைப் பெறுவதற்கான இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்தால், உங்கள் துல்லியமான இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படாது. ஒரு புவியியல் பகுதியுடன் உங்கள் தோராயமான இருப்பிடத்தைப் பொருத்தித் தொடர்புடைய தேடல் பரிந்துரைகளையும் செய்திகளையும் வழங்க, உங்கள் இணைய இணைப்பின் IP முகவரியை Apple பயன்படுத்தலாம்.
  • விழிப்பூட்டல்கள் & சுருக்கவழிகளின் தன்னியக்கங்கள்: புவியியல்ரீதியாகத் தொடர்புடைய விழிப்பூட்டல்களை உங்களுக்கு வழங்குவதற்காக, அதாவது குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இருக்கும்போது ஒருவரை அழைப்பதற்கான நினைவூட்டல், அடுத்த அப்பாயின்ட்மென்ட்டிற்கு கிளம்ப வேண்டிய நேரம் அல்லது நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் அடிப்படையில் ஒரு செயலி அல்லது சுருக்கவழி பரிந்துரை போன்றவற்றுக்கு உங்கள் iPhone அல்லது Apple Watch உங்களின் இருப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • எனது இருப்பிடத்தைப் பகிர்தல்: மெசேஜஸ் மற்றும் இடம் அறி போன்ற குறிப்பிட்ட செயலிகளுக்குள் உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பிறருடன் தற்காலிகமாக அல்லது தொடர்ச்சியாக நீங்கள் பகிரலாம்.
  • வீட்டு ஆக்சஸரிகள்: ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் வரும்போது அல்லது அங்கிருந்து கிளம்பும்போது உங்கள் ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்துவதற்காக iPhone உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தும். நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது லைட்களை ஆன் செய்வது, வீட்டிற்கு வருவதற்கு முன்பே உங்களுக்கு விருப்பமான வெப்பநிலையில் தெர்மோஸ்டாட்டை அமைப்பது போன்ற செயல்பாடுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
  • சிஸ்டம் பிரத்தியேகமாக்கல்: சிஸ்டத்தின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை (உதாரணமாக நீங்கள் வீட்டில் இருக்கும்போது மேம்பட்ட பேட்டரி சார்ஜிங்கைத் தானாகச் செயல்படுத்துவது போன்றவை) உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் iPhone பிரத்தியேகமாக்கும். இந்தப் பிரத்தியேகப்படுத்தல் தரவு உங்கள் சாதனத்தில் இருந்து அகற்றப்படாது.
  • Apple Pay வணிகத்தை அடையாளம் காணுதல்: நீங்கள் Apple Cardஐப் பயன்படுத்தும்போது வணிகத்தின் பெயர்களை மிகத் துல்லியமாக வழங்க உதவியாக iPhone உங்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • அவசரகால அழைப்புகள் & SOS: அவசரகால அழைப்பு செய்யப்படும்போது, அவசரகாலச் சேவைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள இருப்பிடத் தகவலுடன் சேர்த்து உங்கள் iPhone அல்லது Apple Watch மேம்படுத்தப்பட்ட அவசரகாலத் தரவுச் சேவை மூலம் கூடுதல் தரவு கிடைக்கும்படிச் செய்யும். உங்கள் தனிப்பட்ட தொடர்பு கார்டில் (எனது கார்டில்) உள்ள வீடு அல்லது பணியிட முகவரிக்கு அருகில் உங்களது தற்போதைய இருப்பிடம் இருந்தால் தெரு முகவரி உள்ளிட்ட விவரத்தையும் இது கொண்டிருக்கக்கூடும். மெசேஜஸ் செயலி நிறுவப்பட்டிருந்தால், அவசரகால SOSஐ இயக்குவதால் அழைப்பின் முடிவில் உங்களின் இருப்பிடமும் அவசரகாலத் தொடர்புகளுக்கு அனுப்பப்படும்.

Apple மூலம் சேகரிக்கப்பட்ட கிரவுடு சோர்ஸ் செய்யப்பட்ட இருப்பிடத் தரவில் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்த முடியாது.

“சென்ற இடங்கள்”, “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட இருப்பிடங்கள்” (கிடைக்கும் பட்சத்தில்) ஆகியவற்றைச் செயலியுடன் பகிர்வதற்குத் தேர்வுசெய்யலாம். நீங்கள் சென்ற இடங்களைப் பகிர்ந்தால் உணவகங்கள், பூங்காக்கள் போன்று நீங்கள் சமீபத்தில் சென்ற இடங்களைப் பற்றிய தகவல்கள் செயலியுடன் பகிரப்படும். சென்ற இடங்கள் அம்சத்தைப் பகிரத் தொடங்கிய பிறகு நீங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே செயலியுடன் பகிரப்படும். விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட இருப்பிடங்களை நீங்கள் பகிர்ந்தால் அடிக்கடி நீங்கள் செல்லும் இடங்கள் மற்றும் நீங்கள் செல்வதற்கு வாய்ப்புள்ள இருப்பிடங்கள் குறித்த தகவல்கள் செயலியுடன் பகிரப்படும். “சென்ற இடங்கள்”, “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட இருப்பிடங்கள்” ஆகியவற்றைச் செயலியுடன் பகிர்வதற்கு முக்கியமான இடங்கள் & வழிகள் அம்சத்தைச் செயல்படுத்தி உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கான அணுகலை வழங்க வேண்டும்.

உங்கள் சாதனங்களில் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்துவதன் மூலம் Apple, அதன் கூட்டாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் இருப்பிடம் மற்றும் சாலைப் போக்குவரத்து சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உங்கள் இருப்பிடத் தரவு மற்றும் இருப்பிடத் தேடல் தகவல்களைப் பரிமாறுவது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

இருப்பிடச் சேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். அதைச் செய்ய, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று, ஒட்டுமொத்த இருப்பிடச் சேவைகளைத் தட்டி ஆஃப் செய்யலாம் அல்லது ஒவ்வொரு இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் செயலி அல்லது அம்சம் ஒவ்வொன்றுக்கான ஸ்விட்சை “வேண்டாம்” என்று அமைத்து ஆஃப் செய்யலாம். செயலியின் இருப்பிட அமைப்புகளில், “சென்ற இடங்கள்”, “விருப்பமான வழிகள் & கணிக்கப்பட்ட இருப்பிடங்கள்” ஆகியவற்றைச் செயலியுடன் பகிர்வதை நிறுத்தலாம். அனைத்து இணையதளங்களுக்கும் இருப்பிடச் சேவையை ஆஃப் செய்ய, Safari இணையதளங்களுக்கான இருப்பிடச் சேவைகள் அமைப்பை “வேண்டாம்” என அமைக்கவும். “சிஸ்டம் சேவைகள்” என்பதைத் தட்டி இருப்பிட அடிப்படையிலான சிஸ்டம் சேவைகளை முடக்கிய பிறகு, இருப்பிட அடிப்படையிலான சிஸ்டம் சேவையை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தட்டி ஆஃப் செய்யலாம். இருப்பிடச் சேவைகள் அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் தோராயமான இருப்பிடத் தகவலை அறிவதற்காக, உங்கள் இணைய இணைப்பின் IP முகவரி போன்ற பிற தகவல்களைச் செயலிகள் அல்லது இணையதளங்கள் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும்.

இருப்பிடச் சேவைகளில் இருந்து இருப்பிடத் தரவுகளைப் பயன்படுத்த நீங்கள் செயலிகளையோ இணையதளங்களையோ அனுமதித்தால், நீங்கள் அவற்றின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும். அத்தகைய செயலிகள் மற்றும் இணையதளங்கள் உங்களின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவற்றின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-02-11