Safari & தனியுரிமை
Safari உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Safariஇல் உங்களைக் கண்காணிக்க இணையதளங்கள் பயன்படுத்தக்கூடிய தரவுகளை அகற்றவும், தடுக்கவும் Safari அமைப்புகளைப் பயன்படுத்தவும். இந்த விருப்பத்தேர்வுகளைப் பார்க்க, அமைப்புகள் > செயலிகள் > Safari என்பதற்குச் செல்லவும்.
கிராஸ்-சைட் டிராக்கிங்கைத் தடு
சில இணையதளங்கள் மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநர்களைப் பயன்படுத்தும். தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரப்படுத்த இணையதளங்களில் உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநர்.
இந்த விருப்பம் ஆனில் உள்ளபோது, மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநரின் தளத்தைப் பார்வையிடவில்லை எனில் கண்காணிப்புத் தரவு அவ்வப்போது நீக்கப்படும்.
IP முகவரியை மறை
இன்டெலிஜென்ட் டிராக்கிங் தடுப்பு அம்சம் இணையதளங்களை வழக்கம்போலச் செயல்பட அனுமதித்து, சாதனத்தின் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி டிராக்கர்களைத் தடுத்து தேவையற்ற டிராக்கிங்கில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. வெவ்வேறு என்டிட்டிகளால் இயக்கப்படும் இரண்டு தனித்தனி ரிலேக்கள் வழியாக உங்கள் இணைய டிராஃபிக்கில் சிறிதளவை அனுப்புவதன் மூலம் இன்டெலிஜென்ட் டிராக்கிங் தடுப்பை “IP முகவரியை மறை” அம்சம் மேம்படுத்துகிறது. முதலாவது ரிலே உங்கள் இணைய புரோட்டோகால் (IP) முகவரியை அறிந்திருக்கும், ஆனால் நீங்கள் பார்க்கும் இணையதளத்தைப் பற்றி அறிந்திருக்காது. இரண்டாவது ரிலே நீங்கள் பார்க்கும் இணையதளத்தைப் பற்றி அறிந்திருக்கும், ஆனால் உங்கள் IP முகவரியை அறிந்திருக்காது, அதற்குப் பதிலாக இலக்கு இணையதளத்திற்குப் பொதுவான அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வழங்கும். இப்படிச் செய்வதால் உங்களையோ நீங்கள் பார்க்கும் தளங்களையோ அடையாளம் காண்பதற்கான தகவல்கள் எந்தவொரு என்டிட்டியிடமும் இருக்காது.
ரிலே கட்டமைப்பின் வழியாகச் சிறிதளவு டிராஃபிக்கை அனுப்ப நீங்கள் தேர்வுசெய்யலாம். பிரைவேட் ரிலே சந்தாதாரர்கள் அமைப்புகள் > செயலிகள்> Safari > IP முகவரியை மறை என்பதற்குச் சென்று “டிராக்கர்கள் மற்றும் இணையதளங்கள்” என்பதைத் தட்டி பிரைவேட் ரிலே மூலம் டிராஃபிக் அனைத்தையும் அனுப்பலாம். மாறாக, அமைப்புகள் > செயலிகள் > Safari > IP முகவரியை மறை என்பதற்குச் சென்று “டிராக்கர்கள் மட்டும்” என்பதைத் தட்டி தெரிந்த டிராக்கர்களைப் பயன்படுத்தி ரிலே கட்டமைப்பின் மூலம் டிராஃபிக்கை அனுப்ப பயனர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கலாம். அமைப்புகள் > செயலிகள் > Safari > “IP முகவரியை மறை” என்பதற்குச் சென்று, ஆஃப் என்பதைத் தட்டி எப்போது வேண்டுமானாலும் அதை முடக்கலாம்.
மோசடி இணையதளம் குறித்த எச்சரிக்கை
மோசடி இணையதளம் குறித்த எச்சரிக்கை செயல்படுத்தப்பட்டிருக்கும்போது, நீங்கள் சந்தேகத்திற்குரிய ஃபிஷிங் அல்லது மால்வேர் இணையதளத்தைப் பார்வையிட்டால் Safari ஓர் எச்சரிக்கையைக் காட்டும். ஃபிஷிங் என்பது பயனர் பெயர்கள், பாஸ்வேர்டுகள், பிற கணக்குத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளை மோசடியாகத் திருடுவதற்கான ஒரு முயற்சியாகும். வங்கி, நிதி நிறுவனம் அல்லது மின்னஞ்சல் சேவை வழங்குநர் போன்ற சட்டப்பூர்வமான இணையதளம் என்று நம்ப வைக்க முயலும் மோசடி இணையதளம். உங்கள் கம்ப்யூட்டருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடக்கூடிய அபாயகரமான மென்பொருளை நிறுவ மால்வேர் இணையதளங்கள் முயற்சிக்கலாம். ஓர் இணையதளத்தைத் திறக்கும் முன், அது மோசடியானதா, அதில் மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதா என்பதை அறிய இணையதள முகவரியில் இருந்து கணக்கிடப்பட்ட தகவல்களை Google பாதுகாப்பான உலாவல் மற்றும் Appleக்கு Safari அனுப்பும். அமைப்புகள் > பொது அமைப்புகள் > மொழி மற்றும் வட்டாரம் என்பதில் சீனா முதன்மைப் பகுதி அல்லது ஹாங்காங்கை வட்டாரமாக அமைத்துள்ள பயனர்களுக்கு, இந்தச் சரிபார்ப்பை மேற்கொள்ள Tencent பாதுகாப்பான உலாவலையும் Safari பயன்படுத்தலாம். பாதுகாப்பான உலாவல் வழங்குநருடன் அசல் இணையதள முகவரி ஒருபோதும் பகிரப்படாது. அவற்றுக்குத் தகவல் அனுப்பப்படும்போது Google (மற்றும் சீனா முதன்மைப் பகுதி அல்லது ஹாங்காங்கை வட்டாரமாக அமைத்துள்ள பயனர்களுக்கு, Tencent) உங்கள் IP முகவரியையும் பதிவுசெய்யலாம். அமைப்புகள் > செயலிகள்> Safari என்பதற்குச் சென்று “மோசடி இணையதளம் குறித்த எச்சரிக்கை” என்பதைத் தட்டி மோசடி இணையதளங்கள் குறித்த எச்சரிக்கைகளை Safariஇல் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
தனியுரிமையைப் பாதுகாக்கும் விளம்பர அளவீடு
“தனியுரிமையைப் பாதுகாக்கும் விளம்பர அளவீடு” அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் தனியுரிமையைத் தொடர்ந்து பாதுகாக்கும் அதேநேரத்தில், விளம்பரப் பார்வைகள் மற்றும் கிளிக்குகள் தொடர்பான விவரங்களை இணையதளங்களும் விளம்பரதாரர்களும் புரிந்துகொள்ள அட்ரிபியூஷன் அறிக்கைகளை Safari வழங்கும். IP முகவரிப் பாதுகாப்பைப் பயன்படுத்தி பிரத்தியேகப் பயன்முறையில் வரம்புக்குட்பட்ட தரவுகளையே அட்ரிபியூஷன் அறிக்கைகளில் Safari அனுப்பும். அப்போது தரவுச் சேமிப்பகம் தேவைப்படாது, குக்கீகள் பயன்படுத்தப்படாது மற்றும் அனுப்புவதும் தோராயமாக 24 முதல் 48 மணிநேரம் வரை தாமதமாகக்கூடும். அட்ரிபியூஷன் அறிக்கைகளில் தனிப்பட்ட தரவு எதுவும் இருக்காது.
அமைப்புகள் > செயலிகள் > Safari > மேம்பட்டவை என்பதற்குச் சென்று “தனியுரிமையைப் பாதுகாக்கும் விளம்பர அளவீடு” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் தனியுரிமையைப் பாதுகாக்கும் விளம்பர அளவீடு அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
Apple Pay உள்ளதா என்று பார்
நீங்கள் iPhone, iPad, Apple Vision Pro அல்லது Apple Watchஇல் Apple Payஐப் பயன்படுத்தும் செயலி அல்லது இணையதளத்தில் நீங்கள் உள்ளபோது அந்தச் சாதனத்தில் Apple Pay செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அந்தச் செயலி அல்லது இணையதளத்தால் பார்க்க முடியும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > Safari > மேம்பட்டவை என்பதற்குச் சென்று “Apple Pay இருக்கிறதா என்று பார்” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் Apple Pay செயல்பாட்டில் உள்ளதா என்று பார்ப்பதை முடக்கலாம்.
மறைநிலை உலாவல்
“மறைநிலை உலாவல்” செயல்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், தானாக நிரப்பப்படும் தகவல்கள் ஆகியவற்றை Safari நினைவில்கொள்ளாது. மேலும், நீங்கள் திறந்துள்ள தாவல்கள் iCloudஇல் சேமிக்கப்படாது அல்லது உங்கள் சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கப்படாது. உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை இணையதளங்களால் மாற்ற முடியாது என்பதால் நீங்கள் “மறைநிலை உலாவல்” அம்சத்தை ஆஃப் செய்யும் வரை அத்தகைய தளங்களில் வழக்கமாகக் கிடைக்கக்கூடிய சேவைகள் வேறு விதமாகச் செயல்படக்கூடும்.
குறிப்பு: “மறைநிலை உலாவல்” செயல்படுத்தப்பட்டுள்ளபோது, முகவரி பார் வெளிர் பயன்முறை அல்லாது அடர் பயன்முறையில் காட்டப்படும்.
இணையப் பக்க மொழிபெயர்ப்பு
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு இணையப்பக்கத்தின் மொழியையும் தீர்மானிக்க Safari அதனைப் பகுப்பாய்வு செய்கிறது. இது முற்றிலும் உங்கள் சாதனத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வசதி இணையப்பக்கத்தில் இருந்தால், அதை மொழிபெயர்க்க நீங்கள் தேர்வுசெய்யலாம். மொழிபெயர்க்கத் தேர்வுசெய்தால், Safari இணையப்பக்கத்தின் உள்ளடக்கங்களை (முழுமையான வார்த்தையுடன்) Apple சேவையகங்களுக்கு மொழிபெயர்ப்புக்காக அனுப்பும். மொழிபெயர்க்கப்பட்டதும், இணையப்பக்கத்தின் உள்ளடக்கங்களை Apple நீக்கிவிடும்.
“மறைநிலை உலாவல்” பயன்முறையில் இணையதளம் பார்வையிடப்படவில்லை எனில், இணையதளத்தின் முகவரியையும் Appleக்கு Safari அனுப்பும். Appleஇன் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக முகவரியை Apple ஐந்து ஆண்டுகள் வரை சேமித்து வைக்கும். நீங்கள் மொழிபெயர்க்கும் இணையதளங்களின் உள்ளடக்கங்களை Apple சேமிப்பதில்லை, அதனால் Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்துவதற்காக அது பொதுவில் அணுகக்கூடிய இணையதளங்களை மட்டும் பயன்படுத்துகிறது.
நீங்கள் பிற Apple சேவைகளைப் பயன்படுத்தும்போது Apple சேகரிக்கக்கூடிய தரவுகளுடன் (உங்கள் Apple கணக்கு, மின்னஞ்சல் முகவரி அல்லது பிற தரவுகள்) இணையதள உள்ளடக்கங்களும் முகவரிகளும் தொடர்புபடுத்தப்படாது.
உங்களுக்குச் சிறப்பான உலாவல் அனுபவத்தை வழங்க, குறிப்பிட்ட ஓர் இணையப்பக்கத்தை மொழிபெயர்த்த பிறகு, அதே தாவலில் நீங்கள் பார்க்கும் ஒரே டொமைனைச் சேர்ந்த பிற இணையப்பக்கங்களும் மொழிபெயர்க்கப்படலாம். அதே அசல் மொழியில் இல்லாத அல்லது வேறொரு டொமைனில் உள்ள இணையப்பக்கத்தை நீங்கள் பார்க்கும்போது Safari தானாகவே மொழிபெயர்ப்பதை நிறுத்திவிடும்.
ஹைலைட்கள்
நீங்கள் “ஹைலைட்கள்” அம்சத்தைச் செயல்படுத்தினால், இணையப்பக்கத்தில் உள்ள தொடர்புடைய தகவல்களை Safari தானாகக் கண்டறிந்து, நீங்கள் உலாவும்போது அவற்றை ஹைலைட் செய்யும். ஓர் இணையப்பக்கத்தைப் பார்வையிடும்போது, கிடைக்கக்கூடிய ஹைலைட்கள் தொடர்புடையதாக உள்ளனவா என்பதைத் தீர்மானிக்க, இணையப்பக்க முகவரியில் இருந்து கணக்கிடப்பட்ட தகவல்களை OHTTP மூலம் Appleக்கு Safari அனுப்பக்கூடும். ஒரு பக்கத்திற்கான பொருத்தமான ஹைலைட்களைப் பார்க்க நீங்கள் பக்க மெனு ஐகானைத் தேர்ந்தெடுக்கும்போது, ஹைலைட்களை வழங்குவதற்காக இணையப்பக்கத்தின் முகவரியை Appleக்கு Safari அனுப்பக்கூடும். நீங்கள் பிற Apple சேவைகளைப் பயன்படுத்தும்போது Apple சேகரிக்கக்கூடிய தரவுகளுடன் (உங்கள் Apple கணக்கு, மின்னஞ்சல் முகவரி அல்லது பிற தரவுகள்) இணையதள உள்ளடக்கங்களும் முகவரிகளும் தொடர்புபடுத்தப்படாது. அமைப்புகள் > செயலிகள்> Safari என்பதற்குச் சென்று ஹைலைட்ஸ் என்பதைத் தட்டி ஹைலைட்ஸ் அம்சத்தை நீங்கள் ஆன் செய்யலாம்.
இணைய நீட்டிப்புகள்
App Storeஇல் இருந்து Safari நீட்டிப்புகளை நீங்கள் பதிவிறக்கலாம். உங்கள் சாதனம் நிர்வகிக்கப்பட்டால், Safari நீட்டிப்புகளை உள்ளடக்கிய ஒரு செயலியை உங்கள் பணியமர்த்துநர் அல்லது கல்வி நிறுவனம் வழங்கக்கூடும். Safari நீட்டிப்பைப் பயன்படுத்தும் முன், Safariஇல் அல்லது அமைப்புகள் > Safari > நீட்டிப்புகள் என்பதற்குச் சென்று அதை ஆன் செய்ய வேண்டும். ஆன் செய்யப்பட்டதும், நீங்கள் பார்க்கும் இணையப்பக்கங்களை வாசிக்கவோ மாற்றவோ நீட்டிப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும். அமைப்புகள் > செயலிகள் > Safari > நீட்டிப்புகள் என்பதற்குச் சென்று நீட்டிப்பு எந்தெந்த இணையதளங்களை வாசிக்கலாம், மாற்றலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் மூன்றாம் தரப்பு இணைய நீட்டிப்பைப் பயன்படுத்தினால், அந்த மூன்றாம் தரப்பின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை, நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உட்படுவீர்கள். அத்தகைய நீட்டிப்புகள் உங்கள் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவற்றின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
iCloud ஒத்திசைவு
உங்கள் iCloudஐப் பயன்படுத்தி, திறந்திருக்கும் உங்கள் தாவல்கள், தாவல் குழுக்கள், தானாக நிரப்பப்படும் தகவல்கள், புக்மார்க்குகள், வாசிப்புப் பட்டியல், வரலாறு ஆகியவை உட்பட Safariஇல் உள்ள தகவல்களை உங்கள் சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைத்த நிலையில் வைத்திருக்கலாம். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று Safari என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் இந்த அம்சத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களைப் பரிமாறவும், சேகரிக்கவும், பராமரிக்கவும், செயலாக்கவும் மற்றும் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்குகிறீர்கள்.
தக்கவைத்தல்
Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12