Savings & தனியுரிமை

கணக்கு உருவாக்கம், அடையாளச் சரிபார்ப்பு, மோசடித் தடுப்பு ஆகியவற்றுக்காக உங்கள் விண்ணப்பம், கணக்கு, சாதனம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் அமைப்புகள் குறித்த தகவல்கள் Apple மற்றும் Goldman Sachs உடன் பகிரப்படும்.
 

பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட முறையில் உங்கள் சேமிப்புகளை அதிகரிக்க உதவும் வகையில் Savings வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • உங்கள் சேமிப்புக் கணக்கை அமைக்கும்போது நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் Apple மற்றும் Goldman Sachsஆல் பயன்படுத்தப்படும்.
  • நீங்கள் உங்கள் Savings உடன் ஒரு வங்கிக் கணக்கை இணைக்கும்போது அல்லது உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு அல்லது அந்தக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யும்போது மோசடியைத் தடுப்பதற்காக மேற்குறிப்பிட்ட சில தகவல்களும் கணக்கு மற்றும் சாதனம் தொடர்பான தகவல்களும் Goldman Sachs மற்றும் அதன் சேவை வழங்குநர், Apple Payments Inc. ஆகியவற்றால் பயன்படுத்தப்படலாம்.
  • உங்கள் Savings பரிவர்த்தனைகளை Appleஇன் இதர சேவைகளில் இருந்து தனியாகச் செயலாக்குவதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக முற்றிலும் தங்களுக்குச் சொந்தமான துணைநிறுவனமான Apple Payments Inc. நிறுவனத்தை Apple பயன்படுத்துகிறது.
  • நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் Savings அம்சங்கள் போன்ற உங்களுடன் தொடர்படுத்த முடியாத Savings தரவை Savings மற்றும் பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த Apple பயன்படுத்தக்கூடும்.

உங்கள் சேமிப்புக் கணக்கை அமைத்தல்

சேமிப்புக் கணக்கைத் தொடங்க உங்களிடம் Apple Card கணக்கு இருக்க வேண்டும். இந்த அம்சம் உங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/apple-card இணையதளத்தில் “Apple Card & தனியுரிமை” என்பதைப் பாருங்கள்.

உங்கள் சேமிப்புக் கணக்கை உருவாக்கும்போது, உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் கீழே காட்டப்படும் தகவல்களை Apple மற்றும் Goldman Sachs Bank USA, Salt Lake City Branch (“Goldman Sachs”) பயன்படுத்தலாம். மேலும், உங்கள் கணக்கை அமைப்பதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் Goldman Sachs இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும்.

  • உங்கள் Apple கணக்கு, அதன் பெயர், கணக்குடன் தொடர்புடைய ஃபோன் எண்கள், முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள்
  • உங்கள் Apple கணக்கு, iTunes மற்றும் App Store கணக்கின் செயல்பாடுகள் பற்றிய பொதுவான தகவல்கள் (எடுத்துக்காட்டாக, iTunesஇல் நீண்டகாலத்திற்குப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளீர்களா என்ற விவரம்)
  • உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்கள் (எடுத்துக்காட்டாக, சாதனத்தின் அடையாளத் தகவல், ஃபோன் எண், IP முகவரி மற்றும் உங்கள் சாதனத்தின் பெயரும் மாடலும்)
  • கணக்கு அல்லது சாதனத்தில் இதுவரை சேர்த்த பேமெண்ட் கார்டுகள்
  • Apple Payஇல் நீங்கள் சேர்த்துள்ள அல்லது சேர்க்க முயன்ற பேமெண்ட் கார்டுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பான தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்

வரி இணக்க நோக்கங்களுக்காக, உங்கள் சமூகப் பாதுகாப்பு எண்ணையும் வரிப் பிடித்தத்தின் நிலையையும் Goldman Sachs கேட்கும்; Apple இந்தத் தகவல்களைப் படிக்கவோ சேமிக்கவோ செய்யாது.

இருப்பிடச் சேவைகள் அம்சத்தை நீங்கள் வாலெட் செயலிக்குச் செயல்படுத்தி இருந்தால், உங்கள் சேமிப்புக் கணக்கை உருவாக்கும்போது, புதுப்பிக்கும்போது அல்லது ஒரு சாதனத்தில் முதல் முறையாகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்போது, மோசடித் தடுப்புக்காக உங்கள் தோராயமான இருப்பிடத் தகவல் Apple மற்றும் Goldman Sachs மூலம் பயன்படுத்தப்படும். நீங்கள் Apple Payஇல் ஏதேனும் பேமெண்ட் முறையைச் சேர்க்கும்போது அல்லது Apple Cardஐப் பெற விண்ணப்பிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது, மோசடியைத் தடுப்பதற்காகக் குறிப்பிட்ட சாதன அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற தகவல்களும், சாதனத்தைப் பயன்படுத்தும் விதமும் (எடுத்துக்காட்டாக, சாதனம் நகர்வில் இருந்த நேரத்தின் சதவீதம் அல்லது ஒரு வாரத்தில் மேற்கொண்ட அழைப்புகளின் தோராய எண்ணிக்கை) Appleக்கு அனுப்பப்படலாம். மோசடியைத் தடுப்பதற்காக உங்கள் சேமிப்புக் கணக்கின் ஃபோன் எண் பற்றிய தகவலையும் உங்கள் நெட்வொர்க் வழங்குநரிடம் இருந்து Apple பெறலாம். உங்கள் சாதன இருப்பிடத்திற்கான அணுகல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/location-services இணையதளத்தில் “இருப்பிடச் சேவைகள் & தனியுரிமை” என்பதைப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை அமைக்கும்போது, உங்கள் சாதனத்தில் உள்ள Savingsஇல் சேமிப்புக் கணக்கு மற்றும் ரூட்டிங் எண்களை வழங்குவதற்காக Goldman Sachs அவற்றை Appleக்கு அனுப்பும். Apple இந்தத் தகவல்களைச் சேமிக்காது.

உங்கள் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துதல்

நீங்கள் உங்கள் சாதனத்தில் சேமிப்புக் கணக்கைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம். அதாவது உங்கள் சேமிப்புக் கணக்கு எண், ரௌட்டிங் எண், இதுவரையான பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம், உங்கள் கணக்கு இருப்புத் தொகையில் காலப்போக்கில் ஏற்படும் மாறுதல்களைப் பார்வையிடலாம், உங்கள் கணக்குத் தகவல்களை மாற்றலாம், Savingsஇல் இருந்து பணத்தைப் பரிமாற்றுவதற்காகப் பிற வங்கிக் கணக்குகளை இணைக்கலாம்.

ஒரு பரிவர்த்தனை முடிந்த பிறகு, சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதற்காகவும் மோசடியைத் தடுப்பதற்காகவும் நிதிசார்ந்த நெறிமுறைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் Savings பரிவர்த்தனைத் தரவை Goldman Sachs மற்றும் Apple Payments Inc. சேமித்துப் பயன்படுத்தும். உங்கள் தனிப்பட்ட தரவை Appleஇன் இதர சேவைகளுக்குத் தெரியாத வகையில் Appleஇன் இதர சேவைகளில் இருந்து தனியாகச் சேமித்துச் செயலாக்குவதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக முற்றிலும் தங்களுக்குச் சொந்தமான துணைநிறுவனம் மற்றும் உரிமம் பெற்ற பணப்பரிமாற்ற நிறுவனமான Apple Payments Inc. நிறுவனத்தை Apple உருவாக்கியுள்ளது. Savingsஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக Apple Payments Inc. நிறுவனத்தில் சேமித்து வைக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தரவு நீங்கள் கோரும் சேவைகளை வழங்குதல், சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல், ஒழுங்குமுறை நோக்கங்கள், மோசடியைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

Apple ஒவ்வொரு Savings பரிவர்த்தனைத் தகவலையும் உங்கள் iCloud கணக்கில் வழங்கிச் சேமிக்கும், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் இதுவரையான பரிவர்த்தனைகளைப் புதுப்பித்த நிலையில் வைக்கும். உங்கள் பரிவர்த்தனைகள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி iCloudஇல் சேமிக்கப்படுகின்றன, இது உங்கள் தரவுக்கு உயர்நிலைப் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் சாதனத்தின் தனித்துவமான தகவலுடன் உங்கள் சாதனத்தின் பாஸ்கோடை இணைத்து உருவாக்கப்படும் கீயால் உங்கள் தனிப்பட்ட தரவு பாதுகாக்கப்படும், அந்த கீ உங்களுக்கு மட்டுமே தெரியும்.

Savingsஇல் ஒரு வங்கிக் கணக்கை இணைக்கும்போது அல்லது ஓர் இணைக்கப்பட்ட கணக்கிற்கோ அந்தக் கணக்கில் இருந்தோ பணத்தைப் பரிமாற்றும்போது, Savings மற்றும் உங்கள் வங்கிக் கணக்கு இடையே ஓர் இணைப்பை அமைக்க Apple அந்த வங்கிக் கணக்கு பற்றிய தகவலைப் பெற்றுப் பயன்படுத்தக்கூடும், இதில் வங்கியின் பெயர், வங்கிக் கணக்குடன் தொடர்புடைய கணக்கு ஐடி போன்றவை அடங்கும். மோசடியைத் தடுப்பதற்காக Apple இந்தத் தகவலையும் உங்கள் இருப்பிடம் பற்றிய தகவலையும் Goldman Sachs மற்றும் Apple Payments Inc. உடன் பகிரக்கூடும். Goldman Sachs மூலம் கணக்குக்கு இரண்டு சிறிய டெபாசிட்களை அனுப்ப வைத்து அந்தத் தொகைகளை உங்கள் Apple சாதனத்தில் சரிபார்ப்பதன் மூலம் அல்லது உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் கணக்கின் உரிமையைச் சரிபார்க்க உங்களிடம் கேட்கப்படலாம். அந்தத் தொகையையும் சரிபார்ப்பு வெற்றியடைந்ததா இல்லையா என்பதையும் Apple பார்க்கும் ஆனால் தகவல்களைச் சேமிக்காது. Savings அல்லது உங்கள் Apple Card கணக்கில் ஒரு வங்கிக் கணக்கை இணைத்தால் அது உங்கள் Savings மற்றும் Apple Card கணக்கு இரண்டிலும் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்காகக் காட்டப்படும்; உங்கள் Savings அல்லது Apple Card கணக்கில் ஒரு வங்கிக் கணக்கை நீக்கினால் இரண்டு அம்சங்களிலும் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து அது நீக்கப்படும்.

Savingsஇல் ஒரு பயனாளியைச் சேர்த்தால், பயனாளியின் என்கிரிப்ட் செய்யப்பட்ட பெயர், முகவரி, ஃபோன் எண், உறவுமுறை, பிறந்ததேதி, சமூகப் பாதுகாப்பு எண் ஆகியவை Apple மூலமாக Goldman Sachsக்கு அனுப்பப்படும். பயனாளி சேர்க்கப்பட்டாரா இல்லையா என்பதை Apple பார்க்கும் ஆனால் சேமிக்காது. செயலில் உள்ள உங்கள் பயனாளிகளைப் பார்க்கும்போது பயனாளித் தகவல் உங்கள் சாதனத்தில் காட்டப்படுவதற்காக Apple சர்வர்கள் வழியாக Goldman Sachsஆல் அனுப்பப்படும். Apple பயனாளித் தகவலைப் பார்க்கும் ஆனால் சேமிக்காது.

Savings மற்றும் குடும்பப் பகிர்வு

சேமிப்புக் கணக்குதாரர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கை iCloud குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தி பகிர முடியாது, ஆனால் Apple Card இணை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி சேமிப்புக் கணக்கை உருவாக்கலாம். இணை உரிமையாளர் ஒரு வங்கிக் கணக்கைத் தனது Savings அல்லது இணை உரிமை Apple Card கணக்குடன் இணைக்கும்போது, அது அந்த இணை உரிமையாளரின் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கில் மட்டுமே இணைக்கப்பட்ட வங்கிக் கணக்காகக் காட்டப்படும், அதேநேரம் இணை உரிமையாளர்கள் இருவரின் Apple Card கணக்கிலும் அது தோன்றும். உங்கள் Savings அல்லது இணை உரிமை Apple Card கணக்கில் இருந்து இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை நீக்குவதால் உங்கள் இணை உரிமையாளரின் சேமிப்புக் கணக்கில் இருந்து அந்த இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு நீக்கப்படாது.

Savings மற்றும் பகுப்பாய்வுகள்

Savingsஐ மேம்படுத்துவதற்காக, சேமிப்புக் கணக்கு உருவாக்கச் செயல்முறை மற்றும் வாலெட் செயலியில் உள்ள Savings அம்சங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவல்களை Apple சேகரித்து, அந்தத் தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாத வகையில் சேமிக்கும். இந்தத் தகவல்களில் கணக்கு உருவாக்கச் செயல்முறையை நிறைவுசெய்ய ஆகும் நேரம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் Savings அம்சங்கள், மிகச் சமீபத்திய பரிவர்த்தனைகளின் பட்டியல் போன்றவை அடங்கும். Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்தத் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.

Savings மற்றும் தகவல்தொடர்புகள்

ஒரு மெசேஜ் (மார்க்கெட்டிங் மெசேஜ் உட்பட) உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பதற்காக நீங்கள் சேமிப்புக் கணக்கிற்கு விண்ணப்பித்துள்ளீர்களா அல்லது உங்களிடம் சேமிப்புக் கணக்கு உள்ளதா என்ற உங்கள் சேமிப்புக் கணக்கு நிலை பற்றிய தகவலை Apple பயன்படுத்தக்கூடும். உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத, அடையாளம் தெரியாத மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்கள் Savings மார்க்கெட்டிங் மற்றும் பிற மெசேஜ்களை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சலில் உள்ள சந்தா விலகல் இணைப்பை கிளிக் செய்து அல்லது வாலெட்டில் அறிவிப்புகளை ஆஃப் செய்து மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கான ஒப்புதலைத் திரும்பப் பெறலாம்.

Savings உதவி மையம்

சேமிப்பு அம்சம் பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், வாலெட் செயலியில் இருந்து மெசேஜ் அனுப்பி உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்காக நீங்கள் பகிரும் தகவல்களை Apple பயன்படுத்தும், இதில் உங்கள் தனிப்பட்ட தரவும் அடங்கும். சேவையை வழங்குவதற்காக உங்கள் விசாரணை Goldman Sachsக்கு அனுப்பப்பட வேண்டும் எனில், Apple உங்களைப் பற்றிய தகவலையும் உங்கள் விசாரணையையும் Goldman Sachs உடன் பகிரும், இதன் மூலம் அவர்கள் இன்னும் சிறப்பாக உங்களுக்கு உதவக்கூடும். சேவைக்காக Goldman Sachsக்கு அனுப்பும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய நிதித் தகவல்களை Apple தக்கவைக்காது. நீங்கள் 877-255-5923 என்ற எண்ணில் உதவி மையத்தை நேரடியாக அழைத்தும் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

உங்கள் சேமிப்புக் கணக்கை மூடுதல்

நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை மூடினால், உங்கள் சேமிப்புக் கணக்கு பற்றிய தகவல்கள் அமைப்புகள் > வாலெட் & Apple Pay > “மூடப்பட்ட கணக்குகள்” என்பதில் இருக்கும், இதில் நீங்கள் உங்கள் முந்தைய அறிக்கைகள் மற்றும் வரி ஆவணங்களைப் பார்க்கலாம்.

உங்கள் தகவல்களைப் புதுப்பித்தல்

நீங்கள் வாலெட்டில் உங்கள் சேமிப்புக் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கலாம். நீங்கள் Goldman Sachsஐத் தொடர்புகொண்டும் உங்கள் சேமிப்புக் கணக்குத் தகவல்களைப் புதுப்பிக்கலாம். Savings சேவைகளை வழங்குவதற்காக Goldman Sachs புதுப்பிக்கப்பட்ட சேமிப்புக் கணக்குத் தகவல்களை Apple உடன் பகிரக்கூடும்.

மேலும் தகவல்

Apple உங்கள் தகவல்களைச் சட்டரீதியாகத் தேவைப்படும் வகையிலும் மோசடியைத் தடுப்பதற்காகவும் பயன்படுத்தும் மற்றும் Goldman Sachs உடன் பகிரக்கூடும். சேமிப்புக் கணக்கின் கிடைக்கும்தன்மை தொடர்பான அதிமுக்கியத் தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்காக Apple மற்றும் Goldman Sachs கணக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடும். நீங்கள் உங்கள் கணக்கை மூடிய பிறகு கூட, சட்டத்துக்கு இணங்க அல்லது சட்டரீதியாகச் செல்லுபடியாகும் செயல்முறைக்கு இணங்கத் தேவைப்படும் அளவிற்கு Savings தொடர்பான தகவல்களை Apple பயன்படுத்தலாம். Goldman Sachs உங்கள் தனிப்பட்ட தரவை எப்படிப் பாதுகாக்கிறது என்று அறிய அவர்களின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கலாம், இது https://www.goldmansachs.com/privacy-and-cookies/c-privacy-policy.html இணையதளத்தில் உள்ளது.

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி தனிப்பட்ட தரவுச் செயலாக்கம் தொடர்பான ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளராக Apple செயல்படும் இடங்களில், வேறு வகையில் குறிப்பிடப்படாத வரை அந்தச் செயல்பாடுகள் முற்றிலும் Appleக்குச் சொந்தமான துணைநிறுவனமான Apple Payments Services LLC நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும். Savingsஐப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் உங்கள் தகவல்களைப் பரிமாற, சேகரிக்க, பராமரிக்க, செயலாக்க மற்றும் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி மற்றும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி, சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12