சென்சார் & பயன்பாட்டுத் தரவும் தனியுரிமையும்
“சென்சார் & பயன்பாட்டுத் தரவு” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் iOS மற்றும் watchOS சாதனங்களில் உள்ள அல்லது இணைக்கப்பட்ட சென்சார்கள் உடனான உங்கள் செயல்பாடுகள், உங்கள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் உடனான உங்கள் செயல்பாடுகள் ஆகியவை பற்றிய குறிப்பிட்ட தகவல்களை ஆராய்ச்சி ஆய்வுகளுடன் நீங்கள் பகிரலாம். இந்த சென்சார் & பயன்பாட்டுத் தரவில் இந்தச் செயலிகளுக்குச் சாதாரண வழிமுறையில் கிடைக்காத தகவல்களும் இருக்கக்கூடும்.
தகவல் பகிர்வுக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்கிய பின்னர் மட்டுமே ஓர் ஆய்வுடன் சென்சார் & பயன்பாட்டுத் தரவு பகிரப்படும். இந்தத் தகவல் நீங்கள் பதிவுசெய்துள்ள ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு மட்டுமே கிடைக்கும். “ஆராய்ச்சி ஆய்வு” செயலிகளும் ஆய்வுகளும் சென்சார் & பயன்பாட்டுத் தரவிற்கான அணுகலைக் கோரும் முன் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதை Apple கட்டாயமாக்குகிறது, இவற்றில் பின்வருவனவும் அடங்கும்:
- “ஆராய்ச்சி ஆய்வு” செயலி உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தரவுச் சேகரிப்பு, பயன்பாடு மற்றும் பகிர்வு தொடர்பான குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை “ஆராய்ச்சி ஆய்வு” செயலியின் டெவலப்பர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் ஆராய்ச்சி ஆய்வுக்காக நீங்கள் அங்கீகாரமளித்த சென்சார் & பயன்பாட்டுத் தரவை மட்டுமே சேகரிப்பது அல்லது பயன்படுத்துவதும் அடங்கும்.
- ஆராய்ச்சி நெறிமுறைக் குழுவினால் ஒவ்வொரு ஆய்வும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
தரவுகளின் வகைகள்
ஆராய்ச்சி ஆய்வின் ஒரு பகுதியாக, லைட் சென்சார், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் போன்ற iOS மற்றும் watchOS சென்சார்கள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் பிற சாதனங்களில் இருந்து சென்சார் தரவுகள் பெறப்படுகின்றன. இதில் iOS, watchOS அல்லது பிற இணைக்கப்பட்ட சென்சார்களில் இருந்து பெறப்படும் அளவீடுகளும் கணக்கீடுகளும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, முகத்தை வைத்திருக்கும் நிலை மற்றும் முக பாவனைகளின் ஹை-ஃபிடலிடி அளவீடுகள் (புருவத்தை உயர்த்துதல் அல்லது உதடுகளை இருக்கமாகச் சேர்த்துவைத்தல் போன்றவை எத்தனை முறை நிகழ்கிறது என்ற விவரம்) அல்லது உங்கள் குரலின் பண்புகள் (ஒலியளவு, தன்மை, சுருதி, ஏற்ற இறக்கம் போன்றவை). இந்தத் தகவல்களில் அசல் ஆடியோ தரவு அல்லது புகைப்படங்கள் இருக்காது.
பயன்பாட்டுத் தரவு என்பது உங்கள் iOS மற்றும் watchOS சாதனங்களையும் மென்பொருளையும் நீங்கள் பயன்படுத்தும் மற்றும் கையாளும் விதம் பற்றிய தகவல்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, கீபோர்டைப் பயன்படுத்துவது, நீங்கள் அனுப்பும் மெசேஜ்களின் எண்ணிக்கை, நீங்கள் செய்யும் மற்றும் பெறும் அழைப்புகளின் எண்ணிக்கை, நீங்கள் பயன்படுத்தும் செயலிகளின் வகைகள், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களின் வகைகள், குறிப்பிட்ட சென்சார் மற்றும் பயன்பாட்டு நிகழ்வுகள் பதிவுசெய்யப்படும் நேரம், நீங்கள் உங்கள் Apple Watchஐ அணியும் நேரம் ஆகியவை பற்றிய தகவல்கள் இதில் இருக்கக்கூடும். தரவு வகைகளின் பொதுவான அடையாளத் தகவலின் அடிப்படையில் ஆய்வுக்காக, பயன்பாடு மற்றும் சென்சார் தரவின் வெவ்வேறு வகைகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்புபடுத்தக்கூடும்.
குறிப்பிட்ட சென்சார் & பயன்பாட்டுத் தரவுகளில், “ஆராய்ச்சி ஆய்வு” செயலிக்கு வழங்கப்படும் தகவல்கள் பிற செயலிகளுக்கு வழங்கப்படும் தரவுடன் ஒப்பிடும்போது கூடுதல் விவரங்கள் நிறைந்ததாக அல்லது அதிகத் தெளிவுத்திறன் உள்ளவையாக இருக்கக்கூடும். சேகரிக்கப்பட்ட தரவை ஆராய்ச்சி ஆய்வுக்கு எக்ஸ்போர்ட் செய்வதற்காக “ஆராய்ச்சி ஆய்வு” செயலிகள் பின்னணியில் இயங்கும் திறனைக் கொண்டிருக்கலாம்.
தரவைச் சேமித்தல் மற்றும் பகிர்தல்
மோஷன், பேச்சு, பெடோமீட்டர், மெசேஜ்கள் போன்ற பல்வேறு வகைகளாக சென்சார் & பயன்பாட்டுத் தரவு வகைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இணையும் ஆராய்ச்சி ஆய்வுடன் பகிரப்படும் தரவை நீங்கள் கட்டுப்படுத்தலாம். பதிவு செய்யும்போது, “ஆராய்ச்சி ஆய்வு” செயலி ஒவ்வொரு வகைக்கும் சென்சார் & பயன்பாட்டுத் தரவைப் பகிர அணுகல் வழங்க விரும்புகிறீர்களா என்று கேட்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > “ஆராய்ச்சி சென்சார் & பயன்பாட்டுத் தரவு” என்பதற்குச் சென்று எந்தெந்தச் செயலிகள் மற்றும் ஆய்வுகளுடன் சென்சார் & பயன்பாட்டுத் தரவைப் பகிர்கிறீர்கள் என்பதையும் நீங்கள் பகிரும் தரவுகளின் வகைகளையும் பார்க்கலாம்.
ஆராய்ச்சி ஆய்வின் ஒரு பகுதியாக, உங்கள் ஒப்புதலுடன் watchOS அல்லது iOS சாதனங்களில் இருந்து சென்சார் & பயன்பாட்டுத் தரவு சேகரிக்கப்படும். ஒப்புதலளிக்கப்பட்ட ஆய்வுடன் பகிரப்படுவதற்கு முன்பாக உங்கள் iOS சாதனத்தில் தோராயமாக ஒருநாள் வரை (அல்லது குறிப்பிட்ட வகை தரவுகள் ஏழு நாட்கள் வரை) இந்தத் தரவு சேமிக்கப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் தரவை அழித்தால் அது எந்த ஆய்வுடனும் பகிரப்படாது. இந்த சென்சார் & பயன்பாட்டுத் தரவு உங்கள் iOS சாதனங்களில் மொத்தம் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஏழு நாட்களுக்குப் பின் அது உங்கள் iOS சாதனங்களில் இருந்து தானாகவே நிரந்தரமாக நீக்கப்படும், இதற்குப் பிறகு நீங்கள் அங்கீகரிக்கும் எந்த ஆய்வுகளுடனும் அது பகிரப்படாது.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > “ஆராய்ச்சி சென்சார் & பயன்பாட்டுத் தரவு” என்பதற்குச் சென்று சென்சார் & பயன்பாட்டுத் தரவு பகிரப்படுவதை நிறுத்தலாம். நீங்கள் ஓர் ஆராய்ச்சி ஆய்வுடன் சென்சார் & பயன்பாட்டுத் தரவைப் பகிர்வதை நிறுத்தினால், எதிர்காலத் தரவுகள் அந்த ஆய்வுடன் பகிரப்படாது; இருப்பினும், அந்த ஆய்வுக்கு இதற்கு முன்பு நீங்கள் பகிர்ந்த தரவுக்கான அணுகல் தொடர்ந்து கிடைக்கும். ஏற்கெனவே பகிரப்பட்ட சென்சார் & பயன்பாட்டுத் தரவை உங்களால் நீக்கவோ பகிர்வை விலக்கவோ முடியாது. ஓர் ஆராய்ச்சி ஆய்வுடன் தரவைப் பகிர்வதை நிறுத்துவதாலோ அல்லது அந்த “ஆராய்ச்சி ஆய்வு” செயலியை நீக்குவதாலோ, அந்த ஆய்வில் இருந்து தானாகவே விலக்கப்படமாட்டீர்கள். நீங்கள் ஓர் ஆய்வில் இருந்து விலக விரும்பினால், அந்த ஆய்வின் ஒப்புதல் ஆவணத்தில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
2025-12-12