Apple & தனியுரிமை மூலம் உள்நுழையவும்

“Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை அமைப்பதில், மோசடியைத் தடுக்க உங்கள் Apple கணக்கு மற்றும் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை Apple பயன்படுத்தலாம்.
 

உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, Apple தயாரிப்புகளில் உள்ளமைந்த பாதுகாப்பினால் பாதுகாக்கப்பட்ட உள்நுழைவு அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் வகையில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • “Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, செயலிகளிலும் இணையதளங்களிலும் உள்நுழைய உங்களுக்கு உதவுகிறது.
  • சில டெவலப்பர்கள் உங்கள் பெயரைக் கேட்கக்கூடும், வழங்குவதற்கு முன் நீங்கள் உங்கள் பெயரைத் திருத்தலாம். அவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கேட்கக்கூடும், நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம் அல்லது மாற்று முகவரியைப் பயன்படுத்தலாம்.
  • ஒரு செயலி அல்லது இணையதளத்தில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைச் செயல்படுத்தியுள்ளீர்களா என்ற தகவல் Appleக்குத் தெரிவிக்கப்படும், ஆனால் எந்தெந்தச் செயலிகள் அல்லது இணையதளங்களில் உள்நுழைகிறீர்கள் அல்லது எப்போது உள்நுழைகிறீர்கள் என்பதை அது கண்காணிப்பதில்லை.
  • ஒரு செயலியில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை முதல் முறையாகப் பயன்படுத்தும்போது, மோசடியைத் தடுப்பதற்காக உங்கள் கணக்கு மற்றும் Apple உடனான அனுபவங்களைப் பற்றிய தகவலையும், உங்கள் சாதனம் மற்றும் சாதனப் பயன்பாட்டு முறைகள் பற்றிய தகவலையும் Apple பயன்படுத்தும்.

“Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைச் செயல்படுத்துதல்

உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவலை டெவலப்பருடன் பகிராமலேயே ஒரு செயலியில் (அல்லது செயலி கிளிப்பில்) உள்நுழைய உங்களுக்கு உதவுவதன் மூலம் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. வழக்கமான இணையச் செயல்பாடுகளுக்காக உங்கள் உலாவியால் பயன்படுத்தப்படும் தகவல்களுக்கு மேல் கூடுதலாக உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல் எதையும் டெவலப்பருடன் பகிராமலேயே ஓர் இணையதளத்தில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் தகவலுக்குப் பதிலாக, நீங்கள் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தும்போது செயலியின் டெவலப்பருக்குத் தனித்துவமான அடையாளத் தகவலை Apple வழங்கி, உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைக்க உதவுகிறது. இந்த அடையாளத் தகவல் ஒவ்வொரு செயலி டெவலப்பருக்கும் ஏற்ப வேறுபடுகிறது, இதனால் வெவ்வேறு டெவலப்பர்கள் வெவ்வேறு செயலிகளில் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பகிர்வது தடுக்கப்படுகிறது. டெவலப்பர்கள் தங்களின் செயலிகள் அல்லது இணையதளங்களில் ஏற்கெனவே உள்ள கணக்குகளுக்கும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கலாம். இதனை டெவலப்பர் செயல்படுத்தினால், நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் கணக்கிலும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.

ஏதேனும் காரணத்தால் சில செயலிகளுக்கு உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் (எடுத்துக்காட்டாக, உங்கள் பெயரின் மூலம் உங்கள் கணக்கைக் குறிப்பிடுதல் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் உங்களைத் தொடர்புகொள்ளுதல்) நீங்கள் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சில டெவலப்பர்கள் கேட்கக்கூடும். இயல்பாக, உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய பெயர் உங்கள் பெயராகப் பயன்படுத்தப்படும், டெவலப்பருடன் பகிர்வதற்கு முன்பாக அதை நீங்கள் திருத்தலாம். டெவலப்பர் மின்னஞ்சல் முகவரியைக் கேட்டால், டெவலப்பருக்கு வழங்க நீங்கள் உங்கள் Apple கணக்கில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு மின்னஞ்சல் முகவரியையும் தேர்வுசெய்யலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்தால், டெவலப்பர் உங்களைத் தொடர்புகொள்வதற்காக ஒரு தனித்துவமான மின்னஞ்சல் முகவரியை Apple உருவாக்கி டெவலப்பருடன் பகிரும். அந்த மின்னஞ்சல் முகவரியில் பெறும் மின்னஞ்சலை உங்கள் Apple கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு Apple முன்னனுப்பும்; மின்னஞ்சலை டெலிவரி செய்த பின் அல்லது டெலிவரி செய்ய முடியவில்லை எனில் குறுகிய காலத்திற்குப் பின் Apple அதை நீக்கும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloud மெயில் > “மெயில் ஃபார்வேர்டு செய்தல்” என்பதற்குச் சென்று முன்னனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரியை நீங்கள் மாற்றலாம் அல்லது மின்னஞ்சல் முன்னனுப்புதலை முடக்கலாம். உங்கள் Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > “தனிப்பட்ட தகவல்” என்பதற்குச் செல்லுங்கள். “எனது மின்னஞ்சலை மறை” அம்சத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியை நீங்கள் செயல்நீக்கினால் மற்றும் நீக்கினால், தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்திற்காக அந்த முகவரி 30 நாட்களுக்கு உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டு தக்கவைக்கப்படும். அகற்றப்பட்ட முகவரிகள் அதன்பிறகு உங்கள் Apple கணக்கில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும், அதே முகவரியைத் திரும்ப வழங்குவதைத் தடுத்தல் போன்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே தக்கவைக்கப்படும்.

ஒரு செயலியில் “Apple மூலம் உள்நுழைதல்” விருப்பத்தை நீங்கள் செயல்படுத்தினால், அந்தத் தேர்வு iCloudக்காக நீங்கள் பயன்படுத்தும் Apple கணக்குடன் இணைக்கப்படும். இதன்மூலம் உங்கள் Apple சாதனங்கள் அனைத்திலும் அந்தச் செயலியில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை எளிதில் பயன்படுத்த முடியும்.

மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, புதிய செயலியில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை முதல் முறையாகப் பயன்படுத்தும்போது, நீங்கள் உண்மையான நபர்தான் என்ற நம்பிக்கையை வழங்குவதற்காக எளிய பைனரி மதிப்பெண்ணை டெவலப்பருடன் Apple பகிரும். உங்கள் சாதனம், சாதனம் பயன்படுத்தப்படும் விதம் பற்றிய சுருக்கமான தகவலுடன் உங்கள் Apple கணக்கின் சமீபத்திய செயல்பாட்டின் அடிப்படையில் இந்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றிய விரிவான தகவல்களை Apple அல்லது டெவலப்பர்கள் பெறமாட்டார்கள்.

“Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்

ஒரு செயலி அல்லது இணையதளத்தில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் செயல்படுத்தும்போது, அதற்கான உள்நுழைவை அமைக்க உதவுவதற்காக அந்தத் தகவல் Appleக்குத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு iPhoneஇல் உள்ள செயலியில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், எந்தச் செயலியில் உள்நுழைகிறீர்கள் அல்லது “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலை Apple பார்க்காது அல்லது தக்கவைக்காது. அந்தத் தகவல் உங்கள் சாதனத்திலேயே இருக்கும். Safariஇல் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தினால், ஓர் இணையதளத்தில் நீங்கள் உள்நுழையும்போது Apple உங்கள் உள்நுழைவை அங்கீகரிப்பதற்காக அந்தத் தகவலை Apple பார்க்கிறது, ஆனால் எந்தெந்த இணையதளங்களில் உள்நுழைந்தீர்கள் அல்லது “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலை Apple தக்கவைக்காது.

ஒரு செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினாலும், உள்நுழைந்த பிறகு உங்களிடம் கூடுதல் தனிப்பட்ட தகவல்களை டெவலப்பர்கள் கேட்கலாம். டெவலப்பருடன் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாகும்.

“Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நிர்வகித்தல்

“Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நிர்வகிக்க, iOSஇல் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > உள்நுழைதல் & பாதுகாப்பு > “உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தும் செயலிகள்” என்பதற்குச் செல்லுங்கள், Macஇல் சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > “உள்நுழைதல் & பாதுகாப்பு” என்பதற்குச் செல்லுங்கள் அல்லது account.apple.com இணையதளத்தில் “உள்நுழைதல் மற்றும் பாதுகாப்பு” பிரிவில் “Apple மூலம் உள்நுழைதல்” என்பதற்குச் செல்லுங்கள். அங்கு “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியலைப் பார்க்கலாம், அவற்றின் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை முடக்கலாம். ஒரு செயலியில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் முடக்கினால், அந்தச் செயலிக்கான “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை அமைப்பதற்காக டெவலப்பருடன் பகிரப்பட்ட தகவல்கள் மற்றும் உங்கள் “Apple மூலம் உள்நுழைதல்” கணக்குடன் டெவலப்பரால் இணைக்கப்பட்ட தகவல்கள் அந்த டெவலப்பரின் தனியுரிமைக் கொள்கையின்படி தொடர்ந்து கையாளப்படும்.

மேலும் தகவல்

Touch ID, Face ID, வலுவான பாஸ்கோடு விருப்பங்கள் ஆகியவற்றின் மூலம் அமைக்கப்படும் வலுவான அங்கீகாரத்தினால் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பாதுகாக்க Apple செயலாற்றுகிறது.

“Apple மூலம் உள்நுழைதல்” பற்றிய அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்கள் Appleக்கு அனுப்பப்படலாம், இதில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களும் அடங்கும். சேகரிக்கப்படும் தகவல்கள் எதுவும் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாது. Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மார்க்கெட்டிங்கிற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் உங்களை அடையாளப்படுத்தாத தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Appleஆல் பெறப்படும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தின் அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தரவை, மீண்டும் அடையாளம் காண Apple முயலாது.

Apple உங்கள் தகவல்களைச் சட்டரீதியாகத் தேவைப்படும் வகையிலும் மோசடித் தடுப்புக்காகவும் பயன்படுத்தும். “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் உங்கள் தகவல்களைப் பரிமாற, சேகரிக்க, பராமரிக்க, செயலாக்க மற்றும் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தகவலைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவலைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தகவலைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12