வாலெட் & தனியுரிமை
உங்கள் கார்டுகளையும் பாஸ்களையும் கூடுதல் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட முறையில் சேமிக்கவும் நிர்வகிக்கவும் உங்களுக்கு உதவும் வகையில் வாலெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- நீங்கள் ஒரு பாஸைச் சேர்க்கும்போது அது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும், உங்கள் பாஸைக் காட்டுவதற்காகவும் நிர்வகிப்பதற்காகவும் குறிப்பிட்ட பாஸ் தகவல்கள் Apple உடன் பகிரப்படக்கூடும்.
- அமைவு மற்றும் நிர்வாகத்திற்காகத் தனித்துவமான சாதன அடையாளத் தகவலை பாஸ் வழங்குநருடன் உங்கள் சாதனம் பகிரக்கூடும்.
- இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் பாஸ் தகவலை Apple பயன்படுத்தும். உங்கள் பாஸ் வழங்குநர் அவர்களின் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் பாஸ் தகவலைப் பயன்படுத்துவார்.
- கிரெடிட், டெபிட், பிரீபெய்டு, டிரான்ஸிட் கார்டுகள் போன்ற கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் பாஸ்களைப் பற்றிய தகவல் www.apple.com/legal/privacy/data/en/apple-pay தளத்தில் Apple Pay & தனியுரிமை பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எளிதாக அணுகும் வகையில் டிஜிட்டல் டிக்கெட்கள், போர்டிங் பாஸ்கள், கீக்கள் மற்றும் பலவற்றை ஒரே இடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்க வாலெட் உங்களுக்கு உதவுகிறது.
வாலெட்டில் பாஸ்களைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
உங்கள் பாஸ் வழங்குநர் வழங்கிய “Apple வாலெட்டில் சேர்” இணைப்பைத் தட்டியோ, வாலெட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள “பாஸ்களைத் திருத்து” இணைப்பைத் தட்டியோ, “குறியீட்டை ஸ்கேன் செய்” என்பதைத் தேர்ந்தெடுத்தோ, உங்கள் பாஸுக்கான QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ வாலெட்டில் ஒரு பாஸைச் சேர்க்கலாம். நீங்கள் சில மூன்றாம் தரப்புச் செயலிகள் மூலமாகவும் வாலெட்டில் நேரடியாக பாஸைச் சேர்க்கலாம். நீங்கள் வாலெட்டில் ஒரு பாஸைச் சேர்க்கும்போது உங்கள் சாதனம் வாலெட்டில் அந்த பாஸைக் காட்டுவதற்குத் தேவையான தகவல்களை Appleக்கு அனுப்புகிறது, இதில் அந்த பாஸில் தெரியும் டிக்கெட் எண், பெயர் போன்ற தகவல்களும் அடங்கும். Apple அந்த பாஸையும் பாஸ் தகவல்களையும் உங்கள் Apple கணக்குடன் இணைக்கிறது, வாலெட்டில் அந்த பாஸ் இருக்கும் வரை தகவல்களைச் சேமித்து வைக்கிறது மற்றும் பாஸைக் காட்டுவதற்காகவும் நிர்வகிப்பதற்காகவும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. பாஸ் வழங்குநர்களுக்கு பில் வழங்க, உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டாத உங்கள் பாஸைப் பற்றிய தகவல்களையும் Apple ஒருங்கிணைக்கிறது.
வாலெட்டில் பாஸ் சேர்க்கப்படும்போது உங்கள் சாதனம் தனித்துவமான அடையாளத் தகவலை உருவாக்கி அதை பாஸ் வழங்குநருடன் பகிரக்கூடும். பாஸ் வழங்குநர் இந்தத் தனித்துவமான அடையாளத் தகவலை பாஸை அமைக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்தக்கூடும், இதில் நிகழ்ச்சி தொடங்கும் நேரம், போர்டிங் நுழைவாயில் போன்ற பாஸ் தகவலைப் புதுப்பித்தல் போன்றவை அடங்கும். தனித்துவமான அடையாளத் தகவல் உங்களை அல்லது உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்கள் எதையும் பிரதிபலிக்காது, இது ஒவ்வொரு பாஸ் வழங்குநருக்கும் வேறுபடும். பாஸின் பின்பக்கம் தானியங்குப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்துவது அல்லது முடக்குவதன் மூலம் பாஸை நிர்வகிப்பதற்கான பாஸ் வழங்குநரின் திறனைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட பாஸ்கள் உங்களை அனுமதிக்கக்கூடும்.
பாஸை அகற்ற, பாஸின் பின்பக்கம் உள்ள “பாஸை அகற்று” என்பதைத் தட்டுங்கள் அல்லது உங்கள் வாலெட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள “பாஸ்களைத் திருத்து” என்பதைத் தட்டுங்கள். கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்களுக்குப் பயன்படுத்தப்படாத பாஸை நீங்கள் அகற்றினால், உங்கள் சாதனம் அந்த பாஸை நீக்கி, தொடர்புடைய பாஸ் தகவல்கள் அனைத்தையும் Appleஇல் இருந்து நீக்கும். இருப்பினும் உங்கள் பாஸ் வழங்குநர் பாஸ் தகவலையும் தனித்துவமான சாதன அடையாளத் தகவலையும் தக்கவைக்கலாம்.
பாஸ்களைப் பகிர்தல்
AirDrop, iMessage, Mail அல்லது மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவைகளுடன், மெசேஜிங் அல்லது பிற தகவல்தொடர்புச் செயலிகள் மூலம் பாஸ்களைப் பகிர வாலெட் உங்களை அனுமதிக்கிறது. பாஸைப் பகிர மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தினால் அவர்களின் தனியுரிமைக் கொள்கையின்படி அந்தப் பகிர்தல் நிர்வகிக்கப்படும். பெறுநர் பாஸை ஏற்றுக்கொண்டால் பாஸின் நகலும் அந்த பாஸில் காட்டப்படும் அனைத்துத் தகவல்களும் அவர்களுக்கு அனுப்பப்படும். குடும்பப் பகிர்வு செயல்படுத்தப்பட்டிருக்கும்போது, குடும்ப ஒருங்கிணைப்பாளரால் அல்லது பெற்றோரால் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரால் சிறார் கணக்குடன் பகிரப்படும் பாஸ்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படக்கூடும்.
பாஸ் வழங்குநரால் நிர்வகிக்கப்படும் பாஸை நீங்கள் பகிர்ந்தால், உங்கள் சாதனம் அந்த பாஸ் பகிரப்பட்ட விவரத்தை பாஸ் வழங்குநருக்குத் தெரிவிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒரு பாஸை நான்கு பேர் வரை பயன்படுத்தலாம் எனில், உங்கள் சாதனம் அந்த பாஸ் எத்தனை முறை பகிரப்பட்டது என்பதை பாஸ் வழங்குநருக்குத் தெரிவித்து, பாஸ் வரம்பினை பாஸ் வழங்குநர் நடைமுறைப்படுத்த உதவும். பாஸை நிர்வகிக்க Apple உதவுகிறது எனில், அந்த பாஸ் பகிரப்பட்ட விவரம் மற்றும் யாருடன் பகிரப்பட்டது என்பதை உங்கள் சாதனம் Appleக்குத் தெரிவிக்கும். பாஸை நிர்வகிக்க உதவுவதற்காக மட்டுமே Apple இந்தத் தகவலைப் பயன்படுத்தும், தகவலைச் சேமிக்காது.
டிரான்ஸிட் கார்டுகளைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
ஒரு டிரான்ஸிட் கார்டை வாலெட்டில் சேர்த்தால் அந்த டிரான்ஸிட் கார்டு பற்றிய தகவல் Apple கணக்குடன் இணைக்கப்படும். உங்கள் டிரான்ஸிட் கார்டு பேலன்ஸ் நேர்மறை மதிப்பில் இருக்கும் வரை அந்த பேலன்ஸை மீட்டெடுக்க உங்களுக்கு உதவுவதற்காக கார்டு உங்கள் Apple கணக்குடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும். வாலெட்டில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டிரான்ஸிட் கார்டுகளைச் சேர்த்தால், கார்டுகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட மற்றும் கணக்குத் தகவல்களை வெவ்வேறு கார்டுகளுக்கு இடையே Apple அல்லது அதன் கூட்டாளர்களால் இணைக்க முடியும், எடுத்துக்காட்டாக பிரத்தியேக டிராவல் கார்டுகளைப் பிரத்தியேகப்படுத்தப்படாத டிராவல் கார்டுகளுடன் இணைக்கலாம். ஜப்பானில், வாலெட்டில் டிரான்ஸிட் கார்டுகளை அமைத்தல் பற்றிய தொகுக்கப்பட்ட, தனிப்பட்ட வகையில் அடையாளம் காணமுடியாத தகவல்கள் மொபைல் சாதன நெட்வொர்க் வழங்குநர்களுடன் அவ்வப்போது பகிரப்படலாம்.
நீங்கள் டிரான்ஸிட் கார்டைப் பயன்படுத்தும்போது சமீபத்தில் சென்ற நிலையங்கள், இதுவரையான பரிவர்த்தனைகள், கூடுதல் டிக்கெட்கள் போன்ற தகவல்களை கான்டாக்ட்லெஸ் கார்டு ரீடர் அணுகக்கூடும். கார்டு உங்கள் எக்ஸ்பிரஸ் டிரான்ஸிட் கார்டாக அமைக்கப்பட்டிருந்தால் (Touch ID, Face ID அல்லது பாஸ்கோடு இல்லாமல் பரிவர்த்தனையை முடிக்க உதவும் அமைப்பு), இந்தத் தகவலை அருகிலுள்ள கான்டாக்ட்லெஸ் கார்டு ரீடரால் அணுக முடியும். உங்கள் iOS சாதனத்தில் அமைப்புகள் > “வாலெட் & Apple Pay” என்பதற்குச் சென்று அல்லது Apple Watch செயலியில் வாலெட் & Apple Pay > “எக்ஸ்பிரஸ் டிரான்ஸிட் கார்டு” என்பதற்குச் சென்று பேமெண்ட் கார்டைத் தட்டுவதன் மூலம் எக்ஸ்பிரஸ் டிரான்ஸிட்டை நிர்வகிக்கலாம்.
வெகுமதிகள் மற்றும் கிஃப்ட் கார்டுகளைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டோர்களில் வெகுமதிகள் மற்றும் கிஃப்ட் கார்டின் கான்டாக்ட்லெஸ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாலெட்டில் சேமிக்கப்பட்டுள்ள தகுதியான வெகுமதிகள் மற்றும் கிஃப்ட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். உங்கள் வாலெட்டில் வெகுமதிகள் அல்லது கிஃப்ட் கார்டைச் சேர்த்தால், உங்கள் கணக்கு அல்லது கார்டு (அடையாளத் தகவல் உட்பட) பற்றிய தகவல்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டு iCloud வழியாக ஒத்திசைக்கப்படும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஐப் பயன்படுத்தும் செயலிகள் > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று “வாலெட்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து iCloud ஒத்திசைவை முடக்கலாம்.
Apple Gift Cardஐ ரிடீம் செய்த பிறகு அல்லது உங்கள் Apple கணக்கு இருப்புத் தொகையில் தொகையைச் சேர்த்த பிறகு உங்கள் Apple கணக்கு கார்டு வாலெட்டில் சேர்க்கப்படும், இதன்மூலம் உங்கள் சமீபத்திய பரிவர்த்தனைகளை எளிதில் பார்க்கலாம் மற்றும் Apple Storeஇல் Apple கணக்கு இருப்புத் தொகையைப் பயன்படுத்தலாம்.
ஸ்டோர்களில் உங்கள் வெகுமதிகள் அல்லது கிஃப்ட் கார்டைப் பயன்படுத்தும்போது பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக உங்கள் சாதனத்தில் உள்ள தொடர்புடைய வெகுமதிகள் அல்லது கிஃப்ட் கார்டின் வெகுமதிகள் அல்லது கிஃப்ட் கார்டு அடையாளத்தகவலை பேமெண்ட் டெர்மினல் கேட்கக்கூடும். வாலெட்டில் கார்டைத் தேர்ந்தெடுத்து, கார்டு விவரங்களில் தானியங்குத் தேர்வை முடக்குவதன் மூலம் இந்தச் செயல்பாட்டை நீங்கள் முடக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டோர்களில் உங்கள் சாதனத்தில் இருந்து வெகுமதிகள் கார்டு அடையாளத்தகவலை பேமென்ட் டெர்மினல் பெறவில்லை எனில், வாலெட்டில் உங்கள் வெகுமதிகள் கார்டைச் சேர்க்க விரும்புகிறீர்களா அல்லது நீங்கள் உறுப்பினர் இல்லையெனில் வணிக வெகுமதித் திட்டத்தில் பதிவுசெய்ய விரும்புகிறீர்களா எனக் கேட்டு அறிவிப்பு அனுப்பும். வெகுமதிகளுக்காகப் பதிவுசெய்யும்போது உங்கள் பெயர், அஞ்சல் குறியீடு, மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் போன்ற தகவல்களை வழங்கும்படி வணிகம் கோரலாம். வணிகரின் வெகுமதிகள் கார்டை நீங்கள் பிரத்தியேகமாக்கும்போது Appleக்குத் தெரிவிக்கப்படும், இருப்பினும் நீங்கள் பகிரும் தகவல் உங்கள் சாதனத்தில் இருந்து வணிகத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டு, வணிகத்தின் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும்.
மாணவர் ஐடி கார்டுகளைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
ஆதரிக்கப்படும் மாணவர் ஐடி கார்டை வாலெட்டில் நீங்கள் சேர்த்தால், உங்கள் மாணவர் ஐடி கார்டு பற்றிய தகவல்களும் சாதனத்தில் குறிப்பிட்ட அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ள விவரமும் Appleக்குத் தெரிவிக்கப்படக்கூடும். உங்கள் ஐடி கார்டைச் செயல்படுத்த, தகுதியைத் தீர்மானிக்க, உங்கள் கார்டை அமைக்க மற்றும் மோசடியைத் தடுக்க Apple உங்கள் பள்ளிக்கும் பள்ளியால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்களுக்கும் தகவல்களை வழங்கக்கூடும், இதில் பின்வருன அடங்கும்:
- உங்கள் மாணவர் ஐடி கார்டு எண்
- உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பெயரும் பில்லிங் முகவரியும்
- உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல், Apple Watchஐப் பயன்படுத்தினால் இணைக்கப்பட்ட iOS சாதனத் தகவல் (எடுத்துக்காட்டாக சாதன அடையாளத் தகவல், உங்கள் சாதனத்தின் மாடல் எண் போன்றவை)
Apple உங்கள் மாணவர் ஐடி புகைப்படத்தைப் பெற்று அதை உங்கள் Apple கணக்கில் சேமிக்கிறது. கார்டு எக்ஸ்பிரஸ் பயன்முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் (Touch ID, Face ID அல்லது பாஸ்கோடு இல்லாமல் பரிவர்த்தனையை முடிக்க உதவும் அமைப்பு) நீங்கள் மாணவர் ஐடி கார்டைப் பயன்படுத்தும்போது கான்டாக்ட்லெஸ் கார்டு ரீடரால் உங்கள் ஐடி கார்டு எண்ணை அணுக முடியும். உங்கள் iPhoneஇல் அமைப்புகள் > வாலெட் & Apple Pay அல்லது Apple Watch செயலியில் வாலெட் & Apple Pay என்பதைத் தட்டுவதன் மூலம் எக்ஸ்பிரஸ் பயன்முறையை நிர்வகிக்கலாம்.
கார் கீக்களைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
குறிப்பிட்ட வாகனங்களுக்கான கார் கீக்களைச் சேர்க்கவும் பகிரவும் வாலெட் உங்களுக்கு உதவுகிறது. வாகனம் உங்களுக்குச் சொந்தமானது என உரிமைகோர மற்றும் உங்கள் வாகனத்துடன் உங்கள் சாதனத்தை இணைக்க, இணைத்தல் குறியீட்டை உள்ளிட்டு வாலெட்டில் கார் கீயைச் சேர்க்கலாம். கார் கீ சேர்க்கப்பட்டால், உங்கள் சாதனம் பதிவின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து தகவலை Appleக்கு அனுப்புகிறது, Apple அதனை வாகன உற்பத்தியாளருக்கு அனுப்புகிறது; இந்தத் தகவலை Appleஆல் பார்க்க முடியாது, வாகன உற்பத்தியாளரால் மட்டுமே பார்க்க முடியும்.
உங்கள் கார் கீயை அமைக்க Apple உங்கள் வாகன உற்பத்தியாளருடன் ஓர் அடையாளத் தகவலைப் பகிர்கிறது. இந்தச் சாதன அடையாளத் தகவல் ஒவ்வொரு வாகன உற்பத்தியாளருக்கும் வேறுபடும், அமைப்புகள் > பொது > மீட்டமைத்தல் > “அனைத்து உள்ளடக்கத்தையும் அமைப்புகளையும் அழி” என்பதற்குச் சென்று இதனை மீட்டமைக்கலாம். உங்கள் வாகன உற்பத்தியாளர் இந்தச் சாதன அடையாளத் தகவலை அவர்களிடம் இருக்கும் உங்களைப் பற்றிய தகவல்களுடன் இணைத்து, அவர்களின் தனியுரிமைக் கொள்கையின்படி உங்களைப் பற்றிய தகவல்களைச் செயலாக்கலாம்.
உங்கள் கார் கீ பாஸின் பின்பக்கம் உள்ள “அழை” என்பதைத் தட்டுதல், நீங்கள் வழங்க விரும்பும் அணுகல் வகையைத் தேர்ந்தெடுத்தல், iMessageஐப் பயன்படுத்தி கார் கீ பாஸைப் பகிர்தல் ஆகிய வழிகளில் நீங்கள் கார் கீக்களைப் பகிரலாம். கார் கீ பாஸ்களை அமைக்கவும் நிர்வகிக்கவும் உதவுவதற்காக, பாஸ் யாருடன் பகிரப்படுகிறது மற்றும் எந்த வகை அணுகல் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை வாகன உற்பத்தியாளருக்கு Apple அனுப்புகிறது; Apple இந்தத் தகவலைப் பார்ப்பதில்லை. உங்கள் பாஸை நிர்வகிக்க உதவுவதற்காக பாஸ் பெறுநரின் அடையாளத் தகவலையும் வாகன உற்பத்தியாளருடன் Apple பகிர்கிறது. உரிமையாளர்களைப் போல பாஸ் பெறுநர்களுக்கும், வாகன உற்பத்தியாளர் சாதன அடையாளத் தகவலை அவர்களிடம் இருக்கும் பெறுநர் பற்றிய தகவல்களுடன் இணைத்து, அவர்களின் தனியுரிமைக் கொள்கையின்படி அந்தத் தகவல்களைச் செயலாக்கலாம்.
வாகனத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய உங்கள் கார் கீ பாஸை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்ற வாகனத்தை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை Apple சேகரிக்கவோ தக்கவைக்கவோ செய்யாது. உங்கள் வாகன உற்பத்தியாளர் நீங்கள் அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி வாகனப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரிக்கக்கூடும். மேலும் தகவல்களுக்கு உங்கள் வாகன உற்பத்தியாளரின் தனியுரிமைக் கொள்கையை மறுஆய்வு செய்ய வலியுறுத்துகிறோம்.
ஹோம் கீக்களைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
உங்கள் வீட்டில் HomeKit வசதியுள்ள லாக் சேர்க்கப்படும்போது அதாவது ஹோம் செயலியில் லாக் சேர்க்கப்படும்போது வாலெட்டில் ஹோம் கீ தானாகவே சேர்க்கப்படும். ஒரு வீட்டிற்கு ஒரு ஹோம் கீ மட்டுமே இருக்கும்; உங்கள் வீட்டிற்குப் பல லாக்குகள் இருந்தால், ஹோம் செயலியில் அல்லது HomeKit வசதியுள்ள லாக்குகளை நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தும் மற்றொரு செயலியில் லாக்குகளைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம். நீங்கள் வீட்டு உறுப்பினர் நிலையில் இருந்து விலகும்போது அல்லது வீட்டிலிருந்து HomeKit வசதியுள்ள லாக்குகள் அனைத்தும் அகற்றப்படும்போது வாலெட்டில் இருந்து உங்கள் ஹோம் கீ தானாகவே நீக்கப்படும்.
உடல்நலம் செயலியில் இருந்து தடுப்பூசி அட்டைகளைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
உங்கள் தடுப்பூசி அட்டையை விரைவாக அணுகுவதற்காக, உடல்நலம் செயலியில் உங்கள் தடுப்பூசி அட்டையைச் சேர்க்க நீங்கள் QR குறியீடு அல்லது பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தும்போது உங்கள் தடுப்பூசி அட்டை வாலெட்டிலும் சேர்க்கப்படும். வாலெட்டில் தடுப்பூசி அட்டை சேர்க்கப்படும்போது நீங்கள் சேர்த்த தடுப்பூசி அட்டையில் உள்ள தடுப்பூசிப் பதிவுகளின் நகலைச் சாதனத்தில் வாலெட் சேமித்து வைக்கும். உங்கள் தடுப்பூசி அட்டையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, தடுப்பூசி வகை, தடுப்பூசி போடப்பட்ட தேதி(கள்) போன்ற தகவல்கள் இருக்கும். உங்கள் தடுப்பூசி அட்டையைக் காட்டுவதற்காக இந்தத் தகவல்கள் உங்கள் சாதனத்தால் பயன்படுத்தப்படும். வாலெட்டில் சேமிக்கப்பட்ட தடுப்பூசி அட்டை உங்கள் பிற சாதனங்களுடன் ஒத்திசைக்கப்படாது, iCloudஇல் பேக்-அப் செய்யப்படாது. உங்கள் தடுப்பூசி அட்டையில் உள்ள தகவல்கள் அல்லது தடுப்பூசி அட்டையை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை Appleஆல் பார்க்க முடியாது.
Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் நீங்கள் அங்கீகரிக்கும் வரை உங்கள் தடுப்பூசி அட்டையின் முழு விவரங்கள் பூட்டுத் திரையில் காட்டப்படாது. உங்கள் தடுப்பூசி அட்டை விவரங்களைக் காட்ட நீங்கள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் சாதனத்தின் திரையில் காட்டப்படும் தடுப்பூசி அட்டையை உங்கள் சாதனத்தை அணுகக்கூடிய அனைவராலும் பார்க்க முடியும், எனவே உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தடுப்பூசி அட்டையை வாலெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம். வாலெட்டில் இருந்து தடுப்பூசி அட்டையை அகற்றுவது உடல்நலம் செயலியில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் தடுப்பூசிப் பதிவின் நகலை நீக்காது. நீங்கள் உடல்நலம் செயலியில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். உடல்நலம் செயலியில் இருந்து உங்கள் தடுப்பூசிப் பதிவை நீக்கினால், வாலெட்டில் உள்ள அதற்குரிய தடுப்பூசி அட்டையும் நீக்கப்படும்.
தானாக நிரப்புதல் கார்டுகள்
அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று, நீங்கள் சேமித்த தானாக நிரப்புதல் கார்டுகளை இப்போது எளிதாக நிர்வகிக்கலாம். தானாக நிரப்புதல் கார்டுகள் உங்கள் iCloud கீசெயினில் சேமிக்கப்படும், Apple வாலெட்டில் சேமிக்கப்படாது. அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று “Apple Pay உடன் இந்த கார்டுகளைப் பயன்படுத்து” என்பதை ஆன் செய்வதன் மூலம் தானாக நிரப்புதல் கார்டுகளை Apple Payஇல் பயன்படுத்தலாம். இதைச் செயல்படுத்தினால், Apple Pay தகுதியைத் தீர்மானிப்பதற்காக iCloud கீசெயினில் இருந்து உங்கள் தானாக நிரப்புதல் கார்டு எண்களை உங்கள் கார்டின் பேமெண்ட் நெட்வொர்க்குகளுடன் சாதனம் பகிரும். தகுதிபெற்றால், உங்கள் தானாக நிரப்புதல் கார்டுகளை Apple Payஇல் சேர்த்து இன்னும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
Apple வாலெட் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, வாலெட்டில் நீங்கள் சேர்த்துள்ள பாஸ்களின் வகைகள், உங்கள் iCloud குடும்ப நிலை போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். உங்களுக்குப் பொருத்தமான தகவல்களை அடையாளம் காண்பதற்காக Apple வாலெட்டில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மற்றும் உங்கள் தோராயமான இருப்பிடம் (இருப்பிடச் சேவைகள் செயல்பட்டிருந்தால்) பற்றிய தகவல்களையும் உங்கள் சாதனம் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்கள் மெட்ரோபொலிட்டன் வட்டாரத்தில் கிடைக்கும் Apple வாலெட் டிரான்ஸிட் பாஸை உங்கள் சாதனம் காட்டலாம். உங்கள் Apple வாலெட் செயல்பாடு அல்லது தோராயமான இருப்பிடத் தகவல்கள் உங்கள் சாதனத்திற்கு மட்டுமே தெரியும், Appleக்குத் தெரியாது. அமைப்புகள் > வாலெட் & Apple Pay என்பதற்குச் சென்று உங்கள் தகவல்தொடர்பு விருப்பத்தேர்வுகளை நீங்கள் மாற்றலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் வாலெட் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்கள் அடங்கும்:
- உங்கள் கணக்கு (உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பது போன்ற விவரம்)
- உங்கள் சாதனம் (சாதனத்தின் வகை, மென்பொருள் பதிப்பு மற்றும் சாதன வரிசை எண் போன்றவை)
- உங்கள் பாஸ் (பாஸில் காட்டப்படும் தகவல்கள்)
- உங்கள் பாஸ் வழங்குநர் (பாஸுக்கான புதுப்பிப்புகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு போன்ற தகவல்கள்)
- வாலெட்டை நீங்கள் பயன்படுத்தும் விதம் (எடுத்துக்காட்டாக, நீங்கள் சேர்த்த பாஸ்களின் எண்ணிக்கை மற்றும் வகை (எடுத்துக்காட்டாக ஹோட்டல், நிறுவனம்), பாஸைப் பகிர்ந்தீர்களா இல்லையா என்ற விவரம் போன்றவை)
- உங்கள் இருப்பிடம்
நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:
- பாஸைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
- உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
- உங்களுக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்
- சலுகைகளுக்கான தகுதியைச் சரிபார்த்தல்
- வாலெட் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்
பிற தகவல்கள்
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் பாஸ்களைப் பற்றிய தகவல் www.apple.com/legal/privacy/data/en/apple-pay தளத்தில் Apple Pay & தனியுரிமை பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாலெட் மற்றும் பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த, அறிவிப்புகள் உட்பட வாலெட் அம்சங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்று உங்களைத் தனிப்பட்ட வகையில் அடையாளப்படுத்தாத வாலெட் தரவு வரம்பிடப்பட்ட காலத்திற்குத் தக்கவைக்கப்படலாம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12